உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் சடலம் ஊர்வலமாக
எடுத்துச்செல்லப்பட்ட போது பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவுக்கமைய அமைதியான முறையில் ஊர்வலம் இடம்பெற்று இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. வவுனியா, பண்டாரிகுளம் விபுலானந்த கல்லூரியைச் சேர்ந்த குணசேகரம் திவ்வியா (வயது 19) என்ற மாணவி கணித பாடத்தில் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை எனத் தெரிவித்து பாடசாலை அதிபர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டையை வழங்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த குறித்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், இன்று குறித்த மாணவியின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. இதன்போது மாணவியின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பாடசாலையில் வைப்பதற்கு மக்களால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனை பொலிஸார் தடுத்திருந்திருந்தனர். இந்த நிலையில் இரு பகுதியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. பாடசாலைக்குள் சடலம் கொண்டு செல்ல முடியாது எனவும் பேரணியில் குழப்பம் விளைவிக்க முடியாது எனவும் பொலிசார் ஊடாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து அமைதியான முறையில் சடலம் வேப்பங்குளம், பண்டாரிகுளம், வைரவபுளியங்குளம் வீதி வழியாக கொண்டு வரப்பட்டு மன்னார் வீதி தட்சனாங்குளம் இந்து மாயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மாணவியின்ட உடலம் பேரணியாக கொண்டு செல்லப்பட்டதையடுத்து பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதேவேளை, மாணவியின் இறுதிக் கிரியையில் அரசியல்வாதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment