கிழக்கு மாகாணத்தில் பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவன உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து பத்தாவது ஆண்டு
துவங்கும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளனர். 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்குமிடையில் போர் உச்சகட்டத்தை எட்டியிருந்த நேரத்தில் இந்த படுகொலைச் சம்பவம் நடைபெற்றது.
“அக்ஷன் பாம்” தொண்டு நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் 4 பெண்கள் உட்பட 17 பேர் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அலுவலகத்தில் முடங்கியிருந்த போது, இந்தப் படுகொலை நடத்தப்பட்டது. இந்தப் படுகொலை தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் ஏற்கனவே அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதும், விசாரணைகளில் ஏற்பட்டிருக்கும் தாமதமும் அசமந்தபோக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இருந்த போதிலும் தங்களுக்கு எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை பலியான பணியாளர்களின் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
இந்த குடும்பங்களை சேர்ந்த பலரும் இது பற்றி பேசுவதற்கு இன்னமும் அச்சமடைந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். பிபிசி தமிழோசையுடன் பேசிய திருகோணமலை சிவபுரியை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி சிவப்பிரகாசம் ” இந்த படுகொலை சம்பவத்திற்கு இலங்கை அரசும் அக்ஷன் பாம் நிறுவனமும் தான் பொறுப்பு கூற வேண்டும் ” என்றார்.
1998ம் ஆண்டு பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 20 வயதான மகனை இழந்துள்ள கந்தசாமி, அக்க்ஷன் பாம் படுகொலை சம்பவத்தில் 25 வயது மகளையும் இழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக அந்த நிறுவனம் சுமார் 10 லட்சம் ரூபாயை மட்டுமே இழப்பீடு தொகையாக தங்களுக்கு வழங்கியுள்ளதாக கூறுகிறார் இவர். “2007- 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் அந்நிறுவனம் தங்களுடன் எவ்வித தொடர்புகளையும் கொணடிருக்கவில்லை ” என கந்தசாமி பிபிசியிடம் கூறினார்.
சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களின் குடும்பங்களில் அநேகமான குடும்பங்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளன. சில குடும்பங்களே தற்போதும் அங்கு தங்கியுள்ளன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையினரின் விசாரணை, இராணுவ விசாரணை என பல தடவை விசாரணைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது என்றும் இதனால் தனது குடும்பம் மன உளைச்சல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தப் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களின் இந்தச் சம்பவம் குறித்துப் பேசுவதற்கு அச்சமடைந்திருப்பதோடு, இந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இனனமும் தங்களை விடுவிக்க முடியாதவர்களாவே உள்ளனர்.
No comments:
Post a Comment