July 24, 2015

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கம் என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவுள்ள தேர்தல் அறிக்கையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு, படைவிலக்கம் உள்ளிட்ட போருக்குப் பிந்திய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கான தீர்வு, பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நாளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.

நாளை பிற்பகல் 3 மணியளவில் மருதனார்மடத்தில் நடைபெறவுள்ள கூட்டமைப்பின் முதலாவது பரப்புரைக் கூட்டத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளார்.

இந்த தேர்தல் அறிக்கை மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முதன்மையான விடயமாக இருக்கும்.

வடக்கு, கிழக்கில் இருந்து படைகளை விலக்குதல், மீள்குடியமர்வு, மீள்கட்டுமானம் மற்றும் காணாமற்போனோர் விவகாரம், அரசியல் கைதிகளை விடுவித்தல் ஆகியன இரண்டாவது விவகாரமாக இருக்கும்.

பலாலி விமான நிலையத்தை அனைத்துலக தரத்துக்கு உயர்த்துதல், துறைமுகங்களை விருத்தி செய்தல், உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டை உயர்த்துவதற்கான திட்டங்கள் மூன்றாவது விடயமாக இருக்கும்.

போர் முடிவுக்கு வந்த நிலையில், போருக்குப் பிந்திய அபிவிருத்தித் திட்டத்தில் வடக்கு கிழக்கிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் சுற்றுலாத்துறைக்கு நல்ல வாய்ப்பு இருந்தும், அதற்கு முன்னுரிமை அளிக்கப்படாததால் கவலைக்குரிய நிலையில் உள்ளது.

வடக்கு, கிழக்கில் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதன் மூலம் இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள முடியும்.

வடக்கு கிழக்கில் நீர் விநியோகம் மற்றும் நிலத்தடி நீரைப் பாதுகாத்தல் முக்கியமான விடயமாக இருக்கும்.

மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போர் எமது இயற்கை வளங்களை அழித்து விட்டது.

எனவே எமது நீர்வளங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது ” என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment