மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது எனக்கு அன்பும், மரியாதையும் உண்டு. கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்று மரியாதை
செலுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். உடல் நிலை காரணமாக என்னால் பயணம் மேற்கொள்ள இயலவில்லை.
கலாம் இறுதிச் சடங்கில் எனது சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா. விஸ்வநாதன், ஆர்.வைத்தியலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பி.பழனியப்பன், எஸ்சுந்தரராஜ், ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவார்கள் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 6 மாநில முதல்வர்கள், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்த ஜெயலலிதா ராமேஸ்வரம் செல்வார் என்று தகவல்கள் நேற்று வெளியானது. இதுதொடர்பாக நேற்று ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. ராமேஸ்வரம் பயணம் குறித்து ஜெயலலிதா இன்று அறிவிப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஜெயலலிதா தனது சார்பில் அமைச்சர்கள் செல்வார்கள் என்று அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment