July 28, 2015

இலங்கையில் திட்டமிட்ட வகையில் தமிழர்கள் தண்டிக்கப்படுகின்றனர் : யாஸ்மீன் சூகா !

திட்டமிட்ட வகையில் இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் தண்டிக்கப்பட்டு வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிறுவனத்தினை ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி யாஸ்மீன் சூகா வழிநடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் திட்டமிட்ட வகையில் தமிழ் இனச் சமூகம் துன்புறுத்தப்படுவதாகவும் தண்டிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டவிரோத கைதுகள் மற்றும் கொலைகள் உள்ளிட்ட அடக்குமுறைகள் திட்டமிட்ட வகையில் தமிழர்கள் மீது அரச அதிகாரிகளினால் கட்டவிழ்த்துவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவின் பின்னரும் திட்டமிட்ட வகையில் தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகவும், அரசாங்கத்தின் அதி உயர் பீடம் மற்றும் படைத்தரப்பினர் இந்த நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் 41 முகாம்களில் (இரகசிய முகாம்கள் உள்ளடங்களாக) இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் ரீதியாகவும் வேறும் வழிகளிலும் துன்புறுத்தப்படுவதாகவும், தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர் உள ரீதியாக கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சித்திரவதைகளுக்கு உள்ளாகி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என யாஸ்மீன் சூகா வெளியிட்டுள்ள சர்வதேச அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகிவற்றிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment