இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரம் ஏற்பட்டு இன்றுடன் 32 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் நாட்டில் உண்மையான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ள நாடு என்ற வகையில் இலங்கையின் முக்கிய விடயங்களை தைரியமாகவும் நேர்மையாகவும் எடுத்துரைக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1983 ஆம் ஆண்டு ஜுலை 23 ஆம் திகதி தமிழ் மக்களை சூழ்ந்து பரவலாக வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள தேசிய சமாதானப் பேரவை , இந்த வன்முறைகளைத் தொடர்ந்து இலங்கை சர்வதேச ரீதியில் மதிப்பை இழந்ததாகவும் கூறியுள்ளது.
தமிழ் மக்கள் மத்தியில் தரமிக்கவர்களை அடையாளம் காட்டிய இந்த கலவரம் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் போக்கில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக செலவுமிக்க கொடூரமான மூன்று தசாப்த யுத்தத்திற்கு வித்திட்டிருந்த இந்தக் கலவரம் சமூகத்தில் இழையோடியிருந்த கட்டுக்கோப்பை சிதைத்ததுடன் தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.
”எவ்வாறாயினும் 32 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் நிலைமைகள் மாற்றம் அடைந்துள்ள நிலையில் அரசியல்தீர்வொன்றை எட்டுவதற்கான சாத்தியமான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக தேசிய சமாதானப் பேரவை முன்னெடுத்த பணிகள் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவம், அரசியல்தீர்வை ஏற்றுக்கொள்ள சக பிரஜைகளும் மேலும் விருப்பம் கொண்டுள்ளமை தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
அத்துடன் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கும் அவர்கள் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தை தூண்டி அதனை அரங்கேற்றிவர்களிடம் இருந்து தமிழர்களை பாதுகாத்தவர்களையும் நாம் மறந்துவிடக்கூடாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் முஸ்லீம் அயலவர்கள் அடக்கலம் வழங்கியதால் தேசிய சமாதானப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல தமிழர்கள் காயங்கள் மற்றும் உயிரிழப்புக்களின் இருந்து தப்பியிருந்தனர்.
தமது உயிர்களை பணயம் வைத்து தமது வீடுகளில் தமிழர்கள் மறைந்திருப்பதற்கு உதவி வழங்கியவர்களுக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு தமிழர்களை அழைத்துச் சென்றவர்களுக்கும் தாம் கடமைப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவை மேலும் கூறியுள்ளது
No comments:
Post a Comment