கடந்த அரசாங்கத்தில் அமைச்சர் செய்த குழறுபடி காரணமாக பாதிக்கப்பட்ட பலர் இன்றும் வீடின்றி இருக்கின்றனர் என வடமாகாண சுகாதார மற்றும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 50 வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த நாடு தற்போது முக்கிய கட்டத்தில் உள்ளது. நீண்டகால கொடுங்கோலாட்சிக்கு பின்னர் தற்போது நல்லாட்சி என்ற தொனியுடன் புதிய அரசியல் கலாசாரம் மிக்க அரசு நிறுவப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுபான்மையினராகிய தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கிடையேயுள்ள இன, மத பேதங்களை மறந்து தமிழ் பேசும் மக்கள் என்ற உயரிய சிந்தனையுடன் செயலாற்ற வேண்டும்.
நாங்கள் ஒற்றுமையாக எமது பலத்தை நிரூபிப்பதன் மூலமே பேரம்பேசும் சக்தியாக மாறி எமது உரிமைகளை வென்றெடுக்கமுடியும். கடந்த அரசாங்கத்தால் தமிழ் முஸ்லிம் மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்துள்ளோம். கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர் வீட்டுத்திட்டங்களில் குழறுபடிகளை மேற்கொண்டதை நீங்கள் அறிவீர்கள். இந்த வீட்டுத்திட்டம் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளால் உண்மையில் வீடு தேவையானவர்களுக்கு வீடகள் கிடைக்காது வேறு மாவட்டங்களில் செல்வந்தராக வாழ்பவர்களுக்கும் வீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் பயன்படுத்தப்படாது பலவீடுகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலமை மாறவேண்டும. புதிய அரசியல் சூழ்நிலையில் எமக்கிடையே ஒற்றுமையை கட்டியெழுப்பி பலத்தை நிரூபிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
செட்டிகுளம் பிரதேச தமிழரசுக் கட்சிக்கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச கிளையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment