கொலை வழக்கொன்றில் பிரதான எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், அண்மையில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலில் சூத்திரதாரியாக இணங்காணப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை இரத்துச் செய்வதற்கு மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு கோப்பாய் பிரதேசத்தில் இரத்தினம் மணிவண்ணன் என்ற நபரை கொலை செய்ததாக 4 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் முதலாவது எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு வழங்கப்பட்டுள்ள பிணை தொடர்பாகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை 23 ஆம் திகதி இந்த கொலை வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கின் முதலாவது எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது பிணையில் சென்றுள்ள கிருஸ்ணபிள்ளை பிரேமன் என்ற நபர் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை.
அவர் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதி வினவியபோது, அண்மையில் யாழ் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 10 ஆவது எதிரியாக கிருஸ்ணபிள்ளை பிரேமன் மீது குற்றம் சாட்டப்பட்டு, யாழ் நீதவான் நீதிமன்ற உத்தரவில் அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கொலை வழக்கொன்றில் யாழ் மேல் நீதிமன்றத்தில் பிணையில் சென்ற நபர் வழக்கு முடிவடையும் காலம் வரையில் நன்னடத்தையில் இருக்க வேண்டும். அத்துடன் வழக்கு தற்சமயம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
கொலை வழக்கில் தனக்கு பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கே கல்வீச்சு நடத்தி அரச நீதிமன்றத்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நீதவான் நீதிமன்ற கட்டளையில் விளக்கமறியலுக்குச் சென்றிருப்பது, மேல் நீதிமன்றத்தின் பிணையை மீறிய செயலாகும்.
எனவே மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணையை ரத்துச் செய்வதா என்ற விசாரணை எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி நடைபெறும் என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், அன்றைய தினம், குறித்த நபரை மேல் நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கொலை வழக்கின் விசாரணையும், முதலாவது எதிரியாகிய கிருஸ்ணபிள்ளை பிரேமனின் பிணை இரத்து விசாரணையும் ஜுலை மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment