யாழ்.குடாநாட்டின் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்களாகத் தங்களுடைய கல்வியிலே கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்ற வேளையிலே மாணவர்களைத் திசை திருப்பும் வகையில்
போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவது மிகவும் கவலைக்குரிய விடயம்.இது ஒரு சில மாணவர்களையும் தொற்றிக் கொண்டிருப்பது அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.இதனை உடனடியாகக் களைவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார் தமிழீழ விடுதலைக் கழகத்தின்(புளொட்) தலைவரும் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.
கோண்டாவில் சிறி அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும்,சமாதான நீதவான் இ.கெங்காதரனும் இணைந்து ஏற்பாடு செய்த போதைப்பொருள்,மதுசாரம் மற்றும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்ச் செயலமர்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் அதிபர் எஸ்.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய சமூதாயத்தில் மிகச் சிறிய தொகையினர் தான் இவ்வாறான போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமைப்பட்டுள்ளார்கள்.மது,போதைப் பொருட்கள் ஆகியன எமது சமூகம் சீர் கெட்டுப் போவதற்கு பெரிதும் துணை புரிகின்றன.இப்போதெல்லாம் கிராமங்களிலே பல்வேறு நிகழ்வுகளையும் நடாத்த முடியாமலிருக்கின்றன.அவ்வாறு நடாத்தும் போது வாள்வெட்டு அல்லது குழு மோதல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுகிறது.இவ்வாறான வேண்டத்தகாத காரியங்களைப் போதைப் பொருட்கள் மற்றும் அடிமையானவர்களால் மாத்திரமே செய்ய முடியும்.இவ்வாறான தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள் தாங்கள் அழிவதுடன் மாத்திரமன்றி தம்மைச் சார்ந்திருக்கக் கூடிய குடும்பம்,சமூகம் என்பவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை.
நாங்கள் ஒவ்வொருவரும் எங்களது குடும்பங்களிலே,அயல் வீடுகளிலே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கு முயற்சிக்க வேண்டும். இலங்கையிலேயே யாழ்.மாவட்டத்திலே தான் அதிகளவு குடி போதை விற்பனையாவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இதனை நிறுத்துவது எப்படி?உடனடியாக இப் பழக்கங்களை நிறுத்த முடியாவிட்டாலும் படிப்படியாகக் குறைத்து முற்று முழுதாக இல்லாமல் செய்யும் போது தான் ஆரோக்கியமானதொரு சமூதாயத்தை உருவாக்க முடியும்.போதைப் பொருட்களுக்கெதிதாரகக் குரல் கொடுப்பவர்களுக்கு எமது முழுமையான ஆதரவினை வழங்க முன்வருவோம்.
டாக்டர் சிவரூபன் வடமாகாணம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருள் பாவனையை முற்றாக நிறுத்துவதற்கு முயற்சியில் ஈடுபட்டிருப்பது மிகப் பெரும் சமூகத் தொண்டு.இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்விலே மாணவர்கள் அறிந்து கொள்ளும் விடயங்களை ஏனையவர்களுக்கு மாணவர்கள் கொண்டு சென்று சேர்ப்பதன் மூலம் வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியுமென நான் கருதுகிறேன் என்றும் கூறினார்.
இந் நிகழ்விலே முன்னாள் யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும்,பளை வைத்தியசாலையில் பொறுப்பதிகாரியுமான வைத்தியகலாநிதி பி.சிவரூபன் போதைப்பொருட் பாவனையால் ஏற்படும் தீய விளைவுகள் தொடர்பில் காணொலியின் உதவியுடன் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயம்,கோண்டாவில் இந்துக் கல்லூரி,கோண்டாவில் பரஞ்சோதி மகா வித்தியாலயம்,திருநெல்வேலி முத்துத் தம்பி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் குறித்த விழிப்புணர்வுச் செயலமர்விலே பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.