யாழ்ப்பாணத்தில் சைபர் குற்றங்கள் புரிவதற்கு, சைபர் கபேக்கள் அல்லது இணையத்தள நிலையங்கள் உறுதுணையாக இருப்பதாகவும் எனவே, சைபர் குற்றம் சம்பந்தமான சட்டங்களை இறுக்கமாகக் கடைப்பிடித்து அமுல்படுத்துமாறு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற பிணை மனு வழக்கொன்றில் இடம்பெற்ற விசாரணையின் போதே அந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சைபர் கபேக்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் வைத்து, அங்கு குற்றங்கள் புரியப்படுபது கண்டறியப்பட்டால், அந்த நிலையங்களை சீல் வைத்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காதலர் ஜோடிகளின் பூங்காக்களாக யாழ்ப்பாணத்தில் உள்ள சைபர் கபேக்கள் இயங்குவதாகக் குற்றச்சாட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன என சுட்டிக்காட்டியுள்ள அவர், சைபர் கபேக்கள் பொதுமக்கள் மத்தியில் பகிரங்க இடத்தில் இயங்குவதனால், அவைகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு இயங்குகின்றனவா என கண்டறிந்து, அங்கு, கலாசார சீரழிவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சைபர் கபேக்களுக்குள் 18 வயதுக்குக் குறைந்த எந்தவொரு சிறுவனோ, சிறுமியோ அல்லது மாணவனோ, மாணவியோ தனியாக அனுமதிக்கப்படக் கூடாது. தாய் தந்தையர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் வரும்போது மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படலாம்.. மாணவர்களாயின் அவர்கள் தமது ஆசிரியர்களுடன் வர வேண்டும் என்ற நியதி சைபர் கபேக்களில் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், நீதிபதி பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் திரட்டப்பட்டுள்ள சைபர் கபேக்கள் தொடர்பான தரவுகளின்படி, அறிவியல் சார்ந்த விடயங்களையும் தரவுகளையும் இணையத்தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்வதைவிட, பாலியல் ரீதியான இணையத் தகவல்களை தரவிறக்கம் செய்வதிலேயே சைபர் கபேக்கள் முன்னணியில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
எனவே, சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, தொலைதொடர்பு தொழில்நுட்பங்களின் ஊடாகத் தகவல்களைத் திரட்டி, குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சட்டத்தில் பொலிசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய சட்டங்களின் அடிப்படையில் சைபர் குற்றச்செயல்களுக்கு எதிராக முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பேஸ்புக், ருவிற்றர் போன்ற சமூக வலைத்தளங்கள் அறிவியல் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இருந்த போதிலும், கலாசார சீரழிவுகளுக்கும் குற்றச் செயல்களுக்கும் அவற்றைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டிருக்கின்றது.
ஆகவே, எந்தத் தொலைபேசி அல்லது எந்த கைத்தொலைபேசி இலக்கத்தில் இருந்து, எந்தத் தொலைபேசி கோபுரப் பிரதேசத்தில் இருந்து இந்த சைபர் கபேக்கள் இயங்குகின்றன என்பதை நீதிமன்ற உத்தரவைப் பெற்று கண்டறிந்து, அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், குற்றச் செயல்களைத் தடுப்பதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அறிவியல் புரட்சி அல்லது அறிவியல் வளர்ச்சியில் கை வைக்க வேண்டும் என்ற நோக்கம் நீதமன்றத்துக்குக் கிடையாது என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி இளஞ்செழியன், இந்த அறிவியல் கலாசார அழிவுக்கும், சமூக சீரழிவுக்கும், சமூகத்தை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதற்கும், குற்றச் செயல்களுக்குத் துணைபோவதற்கும் உதவுகின்றனவா என்பதைக் கண்டு பிடித்து அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கே இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment