May 2, 2015

இரணைமடு கனகாம்பிகை அம்பாள் தேர்த் திருவிழா வெகு விமரிசை! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு !

இலங்கையின் வடபால் அமைந்துள்ள கிளிநொச்சியின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி  திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று (02/05/2015) சனிக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது. 

கிளிநொச்சியின் அன்னை எனப் போற்றப்படும் அம்பாளுக்கு அதிகாலை விசேட அபிஷேகத்துடன் பூஜைகள் ஆரம்பமாகியது.

காலை 9.30 மணிக்கு அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் சகிதமாய் மூன்று அழகிய சித்திர தேர்களில் ஆரோகணித்து பவனி வந்ததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெய்யுருக வழிபட்டனர்.

ஏராளமான பறவைக் காவடிகள், அங்கப் பிரதட்சணைகள் செய்து ஆண்களும் மற்றும் அடி அளித்து கற்பூரச் சட்டி ஏந்தி பெண்களும் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள்.

ஊர்மக்கள் மட்டுமல்லாது இலங்கையின் பிறபாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் வந்து அம்பாளின் அருளைப் பெற்றனர்.

வன்னி பிரதேசத்திலேயே மிகப்பெரிய சித்திர தேர் உள்ளதும் மூன்று சித்திரை தேர்களை கொண்டதுமாக இவ்வாலயம் விளங்குவதும் இந்த ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளில் ஒன்று.

நாளை (03-04-2015) ஞாயிற்றுக்கிழமை சித்திராபூரணை தினத்தன்று இரணைமடுக்குளத்தில் தீர்த்தம் நடைபெறும்.

தொடர்ந்து மாலை திருவிளக்கு பூசை, இரணை மடுக்குளத்து நீரை எடுத்து வந்து அம்பிகையின் பாதத்திலே ஊற்றும் நிகழ்வான கும்பதீர்த்தம் எடுத்தலும், ஆயிரம் பானைகள் வைத்து பொங்கும் பொங்கல் நிகழ்வும் இடம்பெற்று கொடியிறக்கமும் மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை சங்காபிஷேகம் இடம்பெற்று அன்று இரவு பூங்காவனத் திருவிழா இடம்பெற்று அம்பாளின் வருடாந்த பெரும் திருவிழா இனிதே நிறைவுபெறும்.














No comments:

Post a Comment