April 6, 2015

திரும்பி வருவார்கள்! திருப்பி அடிப்பார்கள்!-புகழேந்தி தங்கராஜ்!

மீள்குடியேற்றம் – நல்லிணக்கம் என்றெல்லாம் மோடி தலையிலும் சர்வதேசத்தின் தலையிலும், இனவெறி இலங்கை  மசாலா அரைப்பதைத்தான், சென்றவாரம் அம்பலப்படுத்தினார் வட மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன். அவர் அதைப் பேசும்போது, மேடையில் இருந்த அதிபர் மைத்திரி, பிரதமர்  ரணில், சந்திரிகா ஆகிய மும்மூர்த்திகளின் முகமும் இஞ்சிதின்ற எதுவோ போல் ஆகிவிட்டதை, ஊர்ஜிதம் செய்கின்றன
புகைப்படங்கள்.
இதில், ரணிலின் நிலைதான் பரிதாபம். இனப்படுகொலை என்கிற உண்மையை ஊரறியச் சொல்லிவிட்டாராம் விக்னேஸ்வரன். ‘இது நியாயமா’ என்பது ரணிலின் கட்சி. ‘விக்னேஸ்வரனைச்  சந்திக்கவே மாட்டேன்’ என்று கொழும்பிலிருந்தபோதே அழும்பு பிடித்தார் ரணில். அவரது போறாத காலம்,  மீள்குடியேற்ற மோசடியை விக்னேஸ்வரன் அடித்துத் துவைத்துக் காயப்போட்டபோது, அந்த உண்மைகளை ஜீரணிக்க முடியாமல் மேடையில் நெளிந்து கொண்டிருந்தார் மனிதர்.
இந்தியாவின் பிரதமர் யாழ்ப்பாணம் சென்றபோதே விக்னேஸ்வரன் இதையெல்லாம் பேசியிருக்கலாமே – என்பது சிலரது ஆதங்கம். விக்னேஸ்வரன் பரபரப்பு அரசியல்வாதியல்ல,   நயத்தகு நாகரிகம் தெரிந்த தலைவர். விருந்தினராகச் சென்ற அண்டை நாட்டின் பிரதமர் முன்னிலையில் எப்படிப் பேசவேண்டுமோ அப்படிப் பேசினார். நாகரிகமான வார்த்தைகளால், தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கையைச் சுட்டிக்காட்டினார். மோடிக்கு விக்னேஸ்வரன் என்ன பேசினார்,, எதற்காகப் பேசினார் என்பதெல்லாம் தெரியாதென்றா நினைக்கிறீர்கள்?
மோடியின் யாழ்ப்பாண பயணத்துக்கு சில வாரங்கள் முன்னதாக, ‘நடந்தது இனப்படுகொலை’ என்கிற தீர்மானத்தை வட மாகாண சபையில் விக்னேஸ்வரன் நிறைவேற்றினாரே…. எதற்காக?  இதைக்கூட மோடி புரிந்துகொள்ளவில்லை என்றாலோ, புரியாததைப்போல நடிக்கிறார் என்றாலோ, விக்னேஸ்வரன் எப்படி அதற்குப் பொறுப்பாவார்!
ஒரு கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தம் மூலம் குறுக்குவழியில்தான்     ரணில் பிரதமராக ஆகியிருக்கிறார் என்றாலும், இன்றையதேதிக்கு அவர்தானே பிரதமர்….. அதனால்தான், அவரை வைத்துக்கொண்டே உண்மை நிலவரத்தை விவரித்திருக்கிறார் விக்னேஸ்வரன்.
“2009ல் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகும், போரின் பெயரால் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளும் சொத்துக்களும்  ராணுவம் மற்றும் அரசியல்வாதிகளின் பிடியில்  இருக்கின்றன. தமது அந்த நிலங்களில் உழைத்துப் பிழைத்து கௌரவமாக வாழ்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். அவர்கள்  இன்னமும் முகாம்களிலேயே வைக்கப்பட்டிருக்கின்றனர். உலக உணவுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் கிடைத்த ரேஷன்  கூட தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது……
முகாமில் இருப்பவர்களில் பெரும்பாலானோரைத் திருப்பி அனுப்புவதற்கான  அறிகுறியே தென்படவில்லை. அவர்களுக்குச் சொந்தமான வளமான நிலங்களில் ராணுவத்தினர் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர். (கூடவே விபசாரமும்! நாகரீகம் கருதி விக்னேஸ்வரன் இதைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன்.)…….. மக்களுக்குத் திருப்பித் தரப்படுவதாய்ச் சொல்லும் நிலங்கள் வெறும் தரிசு நிலங்கள்…..
வளமான நிலங்களில் விவசாயம் மட்டுமில்லை….. ராணுவத்தினர் விளையாட விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்குச் சொந்தமான வளமான விவசாய நிலங்களில்  ராணுவத்தினரின் விளையாட்டு மைதானங்கள் அமைவதை இனியும் அனுமதிக்க முடியாது…..”
இதெல்லாம் விக்னேஸ்வரன் என்கிற தமிழ் மக்களின் முதல்வர் வேதனையோடு சுட்டிக்காட்டியிருக்கிற உண்மைகள்.
இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மீன் உணவுத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை அளித்த மயிலிட்டி பற்றி விக்னேஸ்வரன் விளக்கமாகப் பேசியிருக்கிறார். மயிலிட்டி எப்படித் தரைமட்டமாக்கப் பட்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் விவரித்திருக்கிறார். ‘அணு உலை வெடித்தபிறகு செர்நோபில் நகரம் எப்படியிருந்ததோ அப்படிக் கிடக்கிறது எங்கள் மயிலிட்டி’ என்று  மயிலிட்டி நண்பர் ஒருவர் அலைபேசியில் சொன்னது நூறு வீதம் உண்மை என்பதை உறுதி செய்கிறது விக்னேஸ்வரன் உரை.
மயிலிட்டி மக்களின் வாழ்க்கை கடல் சார்ந்தது. அவர்கள் வாழ்ந்த பகுதியில் மீண்டும் குடியமர்த்தி, அவர்களை மீன்பிடித் தொழில் செய்ய அனுமதித்தால், சுமார் முப்பது முகாம்களை மூடிவிடலாம் – என்பது விக்னேஸ்வரனின் கணிப்பு.
முகாம்களை மூடி மக்களை அவர்கள் இடங்களில் பழைய இயல்பான வாழ்க்கை வாழவைக்க எது தடையாயிருக்கிறது – என்பதையும் போட்டு உடைத்திருக்கிறார் விக்னேஸ்வரன். ‘அந்த மக்களின் உடைமைகளை இவ்வளவு ஆண்டுகளாக இலவசமாக  அனுபவித்தவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் அதை விட்டுவிட மனசு வருமா’ என்பது அவரது கேள்வி.
மீள்குடியேற்றம் – நல்லிணக்கம் என்று சொல்லிச் சொல்லியே, சர்வதேச குற்றவாளிக் கூண்டில் மகிந்தவும் கோதபாயவும்  பொன்சேகாவும் நிறுத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போடும்   அதிமேதாவிகள், விக்னேஸ்வரன் என்கிற அறிவார்ந்த மனிதரின் நடவடிக்கைகளால் அம்பலமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
போரின் பெயரால் அந்த மக்களின் உடைமைகளையும்  நிலங்களையும் பறித்தார்கள். அந்த மக்களின் சொந்த நிலத்தில் ராணுவம் நிற்க, அந்த அப்பாவி மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். 2009ல் போர் நின்றதாக அறிவித்த பிறகும், அபகரித்த நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. முகாம்களில் இருப்பவர்களை அவர்கள் வாழ்ந்த பகுதிக்குள் அனுமதிக்கவுமில்லை. வாழ்ந்த பகுதியில் மீளவும் அவர்களைக் குடியேறவிட்டால், அங்கே இப்போது நிற்கும் ராணுவப் பொறுக்கிகளை எங்கே கொண்டுபோய் நிறுத்துவது? இதுதான் பிரச்சினை இலங்கைக்கு!
இந்திய வெளியுறவுத் துறைக்கு, அதன் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு, பிரச்சினையின் அடிப்படை புரிகிறதா இல்லையா?
எந்தத் திறமையின், என்ன அனுபவத்தின் அடிப்படையில், வெளிவிவகாரத்துறை என்கிற அதிமுக்கியத் துறையை அந்த அம்மையாருக்குக் கொடுத்தார்கள் – என்பது இன்றுவரை எவருக்கும் தெரியாத ராஜாங்க ரகசியம். சுஷ்மாவைத் தனது கேடயமாக இலங்கைக்கு அனுப்பிவைத்த   சோனியாகாந்தியின் அனுக்கிரஹம்தான் இதற்கு அடிப்படை என்று நினைக்கிறேன் நான். அன்னை சோனியாவின் அடிச்சுவட்டிலிருந்து மோடி அரசு என்றைக்காவது விலகியிருக்கிறதா என்ன?
ஸ்ரீமதி.சுஷ்மாஜி, சர்வநிச்சயமாக சோனியாவின் சாய்ஸ். சோனியாவின் கேடயமாகவே இலங்கை போனவர். மனிதமிருகம் மகிந்த ராஜபக்சே கொடுத்த பரிசுப் பொருளை வாங்கிக் கொண்ட பிறகே இந்தியாவுக்குத் திரும்பியவர். தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவம் திரும்பப் பெறப்படும் என்றெல்லாம் அப்போது  வதந்தி கிளப்பிவிடப்பட்டது. ஆனால், சுஷ்மா இந்தியா திரும்பிய அடுத்த நொடியே, ‘தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தைத் திரும்பப் பெற்றால் அதை வேறெங்கே கொண்டுபோய் நிறுத்துவது, இந்தியாவில் கொண்டுபோய் நிறுத்திவிடலாமா’ என்று திமிரோடு கேட்டது மகிந்த மிருகம்.
சுஷ்மாவுக்கு சுயமரியாதை இருந்திருந்தால், மோடியைப் போலவே அவருக்கும் இந்தியா மதமாக  இருந்திருந்தால்,  அடுத்த விமானத்திலேயே கொழும்புக்குப் போய் மகிந்த கொடுத்த பரிசுப் பொருளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்திருக்க வேண்டும். (நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, சுஷ்மாவின் இடத்தில் மோடி இருந்திருந்தால் அப்படித்தான் செய்திருப்பார் என்று நம்புகிறேன் நான்!)
இலங்கையின் 20 டிவிஷன் ராணுவத்தில் 18 டிவிஷன் தமிழர் மண்ணில்தான் நிற்கிறது இன்றைக்கும்! விளையாட்டு மைதானங்கள், விபசார விடுதிகள் என்று அந்த பொறுக்கிகள் உல்லாசமாக இருக்க, தமிழர் நிலங்கள் தேவைப்படுகின்றன. இந்த ஒரே காரணத்துக்காக, சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட எம் மக்கள்  முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கிறார்கள்.
சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டு இன்று வரை முகாம்களில் நரக வேதனையை அனுபவித்துவருகிற மக்களின் மனக்குமுறல் பற்றிக் கவலைப்படாமல், ‘ராணுவத்தை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை’ என்று திமிரோடு பேசுகின்றன, மகிந்த முதல் மைத்திரி வரை அதிபர் பதவியில் அமர்கிற அத்தனை மிருகமும்! உதை வாங்காமல் அவர்கள் வெளியேறமாட்டார்கள் என்பது பழைய வரலாறு. இப்போதும், உதை வாங்கிக் கொண்டுதான் வெளியேறுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் நான்.
இந்த வரலாற்று அறிவே இல்லாமல், புலம்பெயர் நாடுகளிலிருந்து விடுதலைப்புலிகள் மீண்டும் புறப்பட்டு விடும் அபாயம் இருப்பதாக ஆரூடம் சொல்கிறது மைத்திரியின் கைத்தடிகளில் ஒன்று.
புலத்திலிருந்து புலிகள் புறப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் வருவார்கள்….. கண்டிப்பாக வருவார்கள்.   இனப்படுகொலைக்கான நீதியைத் தடுக்கப்பார்க்கும் மண்ணிலிருந்து மீண்டும் எழுவார்கள்.  பறிக்கப்பட்ட நிலங்களின் மீதான உரிமையைத் தொடர்ந்து மறுக்கும் நிலத்திலிருந்து மீண்டும் வருவார்கள். இன அழிப்பைத் தொடரும் பௌத்த சிங்களப் பொறுக்கிகளின் செவுளில் திருப்பி அடிப்பார்கள்.
எந்த மண்ணிலிருந்து மில்லர்கள் வந்தார்களோ, எந்த மண்ணிலிருந்து  அங்கயற்கண்ணிகள் வந்தார்களோ அந்த மண்ணிலிருந்து அவர்கள் வருவார்கள். அவர்களால்தான் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்…. அவர்களால்தான் இழந்த நிலங்கள் மீண்டும் கிடைக்கும்! அவர்களால்தான் எம் இனம் தலைநிமிருமே தவிர மோசடிகளாலும் மோடிகளாலும் அல்ல!
‘கொடுப்பதை வாங்கிக்கொண்டு திருப்தியோடு இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்’ என்று போதிக்கும் இலங்கை அமைச்சர் சுவாமிநாதன் போன்றவர்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பேசவேண்டும். கொடுத்ததை வாங்கிக்கொண்டு திருப்தியடைகிற தங்களது அடிமைத்தனத்தை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது. தங்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட தங்கள் நிலத்தைத்தான் தமிழ் மக்கள் திருப்பிக் கேட்கிறார்களே தவிர, மகிந்தனின் சொத்திலோ மைத்திரியின் சொத்திலோ சுவாமிநாதனின் சொத்திலோ பங்கு கேட்கவில்லை.
இத்தகைய அரசியல் அருவருப்புகளுக்கு இடையில்,  விக்னேஸ்வரனின் தெளிவான அரசியல் பார்வையும், உறுதியான  செயல்பாடும் நம்மை வியக்க வைக்கிறது. நடந்தது இன அழிப்பு – மீள்குடியேற்றம் என்பது மோசடி – சட்டவிரோதக் காவலில் காணாமற்போனவர்கள் – என்கிற உண்மைகளை பட்டவர்த்தனமாக மட்டுமல்ல, ஆதாரத்துடன் பேச அவரால் முடிகிறது.
இனப்படுகொலை – என்று இன்னும் பேசத் துணியாத சம்பந்தன்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இப்போதும்! அவர்தான், விக்னேஸ்வரன் என்கிற முன்னாள் நீதியரசரை அரசியல் களத்துக்கு அழைத்துவந்தவர் என்று கூறப்படுவதுண்டு. அதுமட்டும் உண்மையாக இருந்தால், தனது நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில் சம்பந்தன் செய்த ஒரே உருப்படியான காரியம் இதுவாகத் தான் இருக்கும்.
வடமாகாண சபை தீர்மானம் போடுவதற்கு முன்பே, ‘நடந்தது இனப்படுகொலை’ என்று தெளிவாகத் தீர்மானம் போட்டது தமிழக சட்டப் பேரவை. என்றாலும், பாதிப்புக்கு உள்ளான மண்ணிலிருந்து அப்படியொரு தீர்மானம் போட அசாத்தியத் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிவும் தெளிவும் விக்னேஸ்வரனுக்கு இருக்கிறது. இவ்வளவு தகுதி படைத்த அந்த மனிதரை, தமிழக சட்டப் பேரவைக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து உரைநிகழ்த்தச் சொல்லலாம். அது அவருக்கும் பெருமை, தமிழகத்துக்கும் பெருமை!
விக்னேஸ்வரனை தமிழக சட்டப் பேரவைக்கு அழைக்க, மத்திய அரசு சம்மதிக்குமா – என்று எதிர்க் கேள்வி கேட்பவர்கள் நிச்சயமாக இருப்பார்கள்.  இதற்கெல்லாம் மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன் நான்.
26வது மைலில் நடந்த தமிழினப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை – என்று தமிழக சட்டப் பேரவை தீர்மானம் போட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. அந்தத் தீர்மானம் குறித்த மத்திய அரசின் நிலை இன்னும் தெரிவிக்கப்படவேயில்லை.  சோனியாகாந்தி அரசு போலவே, ஸ்ரீமான் மோடி அரசும் மூச்சு விட மறுக்கிறது. ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அவமதிக்கும் இந்த நேர்மையற்ற மௌனம், விக்னேஸ்வரனுக்கு விடுக்கிற அழைப்பால் ஒரு முடிவுக்கு வரட்டுமே! அழைக்காதே – என்று  தடுத்தால், அதற்கான காரணத்தை விளக்காமல் இருந்துவிட முடியுமா மோடி அரசு?
விக்னேஸ்வரனை அழைப்பது நட்பு நாட்டுடனான உறவைப் பாதிக்கும் – என்று சோனியா பாடி, அந்தப் பாட்டுக்கு சுஷ்மாஜி பின்பாட்டு பாடினால், ‘இலங்கை நமக்கு நட்பு நாடு கிடையாது’ – என்று அறிவிக்கக் கோரும் தமிழக பேரவைத் தீர்மானத்தை மோடிக்கும் சோனியாவுக்கும் மீண்டும் அனுப்பி வைக்கலாம்.
தமிழினப் படுகொலையை முன்னின்று நடத்திய துணை மிருகம்  சரத் பொன்சேகாவை,  இந்தியாவுக்கு அழைத்து கௌரவிக்கிறது மோடி சர்க்கார்.  தமிழக அரசுக்கு அதுகுறித்து முன்னதாகவே தெரிவித்தார்களா? இப்படிச் செய்வது தமிழ்நாட்டில் ஏதாவது எதிர்விளைவை ஏற்படுத்துமா -  என்று ஒரு வார்த்தை கேட்டார்களா?
தமிழக அரசை அவர்கள் இருட்டிலேயே வைத்திருக்கலாம்…. ‘இனப்படுகொலை’ என்கிற தமிழக சட்டப் பேரவைத் தீர்மானத்தைப் பற்றி கவலையே படாமல் அதைச் செய்த பொன்சேகாவுடன் கூடிக் குலாவலாம்! நாம் மட்டும் விக்னேஸ்வரனை கூப்பிடக் கூடாதா என்ன?

No comments:

Post a Comment