April 9, 2015

தனது ஊடகவியலாளரை மாட்டிவிட்ட உதயன் ஆசிரியர் பீடம்!

உதயன் பத்திரிகையில் வேலை செய்பவர்களை அந்தப் பத்திரிகை நிறுவனம் மிகவும் கேவலமாகவே நடத்திவருவது யாவரும் அறிந்த உண்மை. கடந்த காலங்களில் உதயன் பத்திரிகையில் வேலை செய்து அதன் காரணமாக இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பணியாளர்களை படங்களாக வைத்து
தனது சுயநலனுக்காக பயன்படுத்திகின்றதே தவிர உண்மையில் கொல்லப்பட்டவர்களின் உறவுகளை எட்டியும் பார்ப்பதில்லை என்பது பல தடவைகள் பல தரப்பாலும் தெரிவிக்கப்பட்ட ஒன்றாகும்.
இவ்வாறான நிலையில், கடந்த ஓரிருநாட்களுக்கு முன்னர் உதயன் பத்திரிகையில் வெளிவந்த ’வேலியே பயிரை மேய்கின்றதாம்’ என்ற பொலிசாருக்கு எதிரான பாலியல் செய்தி தொடர்பாக, குறித்த பொலிஸ் நிலையம் அச் செய்தி முற்றிலும் தவறான செய்தி என தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக உதயன் ஆசிரியரை பொலிஸ்நிலையம் அழைத்து விளக்கம் கோரிய போது உதயன் ஆசிரியர் குறித்த செய்தி யார் மூலமாக வந்தது என்ற தகவலை கூறி வடமராட்சியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரை காட்டிக் கொடுத்துள்ளார். இதனால் பொலிசார் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரைக் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவர் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளரை இவ்வாறு கைது செய்து விளக்கமறியலில் வைக்கமுடியுமா? இந்த வழக்கு கிறிமினல் வழக்கா? என்ற சர்ச்சைகளுக்குரிய ஐயங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒரு புறம் வைத்து விட்டு உதயன் ஆசிரியபீடம் செய்த செயல் சரியானதா? என்பதை கருத்தில் எடுத்துக் கொள்வோம். ஒரு பத்திரிகையில் செய்தி வெளிவந்தால் அப் பத்திரிகையின் ஆசியபீடமே முதலில் அச் செய்திக்கு பொறுப்புக் கூறவேண்டும்.
தனக்கு செய்தி வழங்கும் ஊடகவியலாளரை மாட்டிவிட்டுத் தாங்கள் தப்ப நினைப்பது எவ்வளவு கோழைத்தனமும் துரோகத்தனமும் என்பதை அனைவரும் உணருதல் வேண்டும்.
செய்தி தவறானதோ, அல்லது பிழையானதோ என்பதை விட குறித்த செய்தியால் சிக்கலு்ககு உள்ளாகப் போகும் தனது ஊழியனை முதலில் பத்திரிகை நிறுவனம் காப்பாற்ற வேண்டியது கடமையாகும். ஆனால் தனக்குச் செய்தி கொடுத்த சுயாதீன ஊடகவியலாளரை உதயன் ஆசிரியபீடம் காட்டிக் கொடுத்து பெரும் கேவலமான வேலையைச் செய்துள்ளது.
அத்துடன் பிடிபட்ட ஊடகவியலாளருக்கு எந்தவிதமான சட்ட உதவிகளையும் அந்த நேரத்தில் உதயன் ஆசிரியபீடம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னைய காலங்களில் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த வித்தியாதரன் ஊடகவியலாளர்களுக்கு ஏதாவது சட்டச்சிக்கல்கள் இருந்தால் அவற்றைக் களைந்தெடுப்பதில் முனைப்பாக இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இது தொடர்பாக ஏனைய ஊடகவியலாளர்களும் மௌனமாக இருக்காது, குறித்த ஊடகவியலாளருக்கான சட்ட உதவிகளையும், அவரை வெளியே கொண்டுவருவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்தல் அவசியமாகும். ஏனெனில் உங்களுக்கு எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலை ஏற்படும் போதும் அந் நேரத்திலும் தற்போதய நிலைபோல் யாரும் கைகொடுக்க மாட்டார்கள் என்பதை விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

No comments:

Post a Comment