December 28, 2014

கொடியவன் கோட்சேவுக்கு சிலை எழுப்பும் எண்ணமே எழாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ!

கொடியவன் கோட்சேவுக்கு சிலை எழுப்பும் எண்ணமே எழாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ
அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்:
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒரு அக்கிரமச்செயலை, மன்னிக்கவே முடியாத மாபாதகத்தை செயல்படுத்த இந்துமகா சபை கொக்கரிக்கிறது. கொற்றம் நடத்தும் நரேந்திர மோடியின் கூட்டம் அதனை ஊக்குவித்து வேடிக்கை பார்க்கிறது.
கத்தியின்றி, இரத்தமின்றி, அகிம்சை யுத்தம் நடத்தி இந்திய நாட்டுக்கு விடுதலை தேடித்தந்தவர் உத்தமர் காந்தியடிகள் ஆவார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையன் அடக்குமுறையை எதிர்த்து அறப்போர் நடத்தி அடக்குமுறை துன்பத்துக்கு ஆளானார்.
பாரிஸ்டர் பட்டம் பெற்ற இவர், கொட்டும் பனியிலும், வாட்டும் குளிரிலும் அரையாடை மனிதராகவே லண்டன் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார். தென் ஆப்பிரிக்கப் போராட்டத்தில் தமிழர்களின் மகத்தான தியாக உணர்வு கண்டு வியந்து தமிழ்மக்களை நேசித்தார். திருக்குறளை போற்றினார். அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என முழங்கினார்.
அவரது உன்னதமான தியாகத்தைப் போற்றிய நெல்சன் மண்டேலா தனக்கு உத்வேகம் தந்தவர் மகாத்மா காந்தி என்றார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது அறையில் ஏசுநாதர் படத்தையும், காந்தியடிகள் படத்தையும் வைத்திருக்கிறேன் என்றார். இந்து முÞலிம் ஒற்றுமைக்காக வாழ்நாள் எல்லாம் போராடிய மகாத்மா காந்தி மதவெறியனான கொடியவன் நாதுராம் விநாயக கோட்சேவால் 1948 ஜனவரி 30 ஆம் தேதி அன்று பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘தீ யமுனைக் கறையில் அல்ல, மக்கள் நெஞ்சில்’ என்றார். தந்தை பெரியார் அவர்கள் இந்த நாட்டுக்கே காந்தி தேசம் என பெயர் சூட்ட வேண்டும் என்றார். ஆனால் உலகம் போற்றும் உத்தமரான காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு நாடெங்கும் சிலை வைக்க வேண்டும் என்று இந்து மகா சபை அறிவிக்கிறது.
காந்தியார் கொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதி அன்று கோட்சேவுக்கு கோயில் கட்டும் வேலையை தொடங்குவோம் என இந்து மகா சபை அறிவித்துள்ளது. இந்த செய்திகளால் நமது மனம் கொதித்துப் போயுள்ள நிலையில், தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் இந்து மகா சபையின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு திண்டுக்கல்லிலும், அனைத்து மாவட்டங்களிலும் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
நாகப்பாம்பையும், கொட்டும் தேளையும் வீட்டுக்குள் வைத்து சீராட்டமாட்டார்கள் என்பதை தமிழக மக்களுக்கு நினைñட்டுகிறேன். தமிழ்நாட்டில் வைகை ஆற்றில்தான், தான் அணிந்திருந்த மேல்சட்டையை கழற்றி வீசிவிட்டு இந்தியாவின் கோடிக்கணக்கான ஏழைகளைப் போலவே நானும் அரையாடை உடுத்துவேன் என்று முடிவெடுத்தார்.
கேட்சேவுக்கு கோயில் கட்டப் போகிறார்கள் என்றால் அன்று அக்கொடியவன் மகாத்மாவை கொலை செய்ய ஏவிய துப்பாக்கிக் குண்டுகளை இந்து முஸ்லிம் ஒற்றுமையின் மீது இப்போது ஏவப்போகிறார்கள் என்றுதான் அர்த்தம். தமிழ்நாட்டில் உள்ள இந்துத்துவா சக்திகளையும் அவர்களின் மதவெறியையும் எதிர்க்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக மக்கள் அனைவரும் இத்தகைய நாசகார முயற்சியை இம்மியளவும் அனுமதிக்கக் கூடாது. மருத்துவர் இராமதாஸ' கூறியது போல இதனை முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.
தமிழக அரசு இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நஞ்சைக் கக்கும் வெறிக் கூச்சலிட எவருக்கும் இனி எண்ணம் ஏற்படாதவிதத்தில் தமிழக மக்கள் கொதித்து எழ வேண்டுகிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment