December 28, 2014

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டுகோள்! வேல்முருகன்!

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும்
தவிப்புக்கும் துன்பத்துக்கும் உள்ளாகியிருப்பது வருத்தம் அளிக்கிறது.


ஊதிய உயர்வு , பணி நிரந்தரம் உட்பட 22 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று  போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த  முடிவு செய்தது. சென்னையில் தொழிலாளர் நல சிறப்பு துணை ஆணையர் யாஸ்பின் பேகம் தலைமையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் 240 நாட்கள் பணி புரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கூறப்பட்டது.
பின்னர் சனிக்கிழமையன்றும் 2வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் திட்டமிட்டபடி டிசம்பர் 29-ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இருப்பினும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் மனம் கொந்தளித்துப் போன போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென முன்கூட்டியே தமிழ்நாடு முழுவதும் இன்று முதலே வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.
 இதனால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அரசுத் துறை மற்றும் கல்லூரித் தகுதித் தேர்வுகள் எழுத செல்ல முடியாமல் பலரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியதாகும்.
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனே கனிவுடன் ஏற்று இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் மாண்புமிகு போகுவரத்து துறை அமைச்சர்  அவர்களையும்  கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment