December 28, 2014

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை விடுக்கும் அவசர வேண்டுகோள்!

போர் ஓய்ந்து பல ஆண்டுகள் உருண்டோடியும் அமைதி திரும்பாத துயர வாழ்வும் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பமுடியாத அவலநிலையும்
அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற பிறர் உதவியை எதிர்பார்த்து நிற்கின்ற இழிநிலையும் நம் தாயகத்தில் வாழும் நம் உறவுகளை பெரும்துன்பத்தில் ஆழ்த்திவருவதை நீங்கள் நன்கறிவீர்கள். இவை போதாது என்று ஆழிப்பேரலை காவு கொண்ட மக்களின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஈழத்தமிழர்கள் மீது இரக்கமற்றஇயற்கை இன்னொரு தடவை தன் கைவரிசையைக் காட்டியுள்ளது.
வெள்ள அனர்த்தத்தால் வட கிழக்கு மக்கள் குறிபபாகத் தென்தமிழீழ மக்கள் பெரும் பாதிப்பினைச் சந்தித்து நிற்கின்றார்கள் என்பதை நாம் அறிகின்றோம். பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
அடுத்தவேளைக்கு உணவின்றியும் மாற்றுத்துணியின்றியும் சுகாதார நலக்கேடுகளினால் தொற்றுநோய்கள் பரவும் அபாயத்தை எதிர் கொண்டபடியும் உதவிகளை எதிர்பார்த்துத் தவித்துப்போய் நிற்கின்றார்கள். நம் சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடுகையில் கரம் கொடுப்பதும் கைதூக்கிவிடுவதும் நம் கடமையல்லவா?
'உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்னும் பசிப்பணி போக்கும் தமிழர் பண்பாட்டுச் செயல் மறந்து நாம் இருக்கலாமா? உடனடியாகச் செயற்பட்டேயாக வேண்டிய அவசரஅவசியச்சூழலில் நாம் அனைவரும் இருக்கின்றோம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயற்படவேண்டும்.
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின்மீது நம் தாயக உறவுகள் கொண்டிருக்கும் பெருத்த நம்பிக்கையினை வலுப்படுத்தும் வகையில் நாம் விரைந்து செயற்படுவோம்.
இவ்வாரத்தினை தாயக உறவுகளின் துயர்துடைப்பு வாரமாக புலம் பெயர் தமிழ் அமைப்புகளால் அறிவிக்கப்பட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். உங்கள் அனைவரையும் இந்தப்பணியில் பங்கேற்க வேண்டும் எனறும் அன்போடு வேண்டிநிற்கின்றோம்.
இன்றும் இயற்கை அனர்த்தத்தால் எவ்வித உதவியும் இல்லாமல் எமது உதவிக் கரங்களை நாடி நிற்கும் நம் உறவுகளுக்கு உதவிடுவோம். நீங்கள் உங்கள் உதவிகளை தமிழர் ஒருங்கிணைப்பு குழு, உங்கள் பிராந்தியத்தில் இருக்கும் தமிழ் சங்கங்கள் மற்றும் எமது காரியாலயத்தின் உதவியையும் நீங்கள் நாடலாம்.

மேலதிக தொடர்புகளுக்கு, போல்: 06 59 99 46 08- தினேஷ்: 06 60 67 59 71
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

No comments:

Post a Comment