போரின்போது பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் போக்கு இன்று போர் நடக்கும் நாடுகளெங்கும் இடம்பெற்றுவருகின்றது. அந்த வகையில் சிங்களப்
பேரினவாத அரசும் தமது இன அழிப்புப் போரின் போதும், போர் நடைபெற்று முடிந்ததன் பின்னரும் தமிழ் மக்கள் மீது பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகக் கையாண்டு வருகின்றது.
சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறையின் உச்சத்திற்கு பலியானவர் கோணேஸ்வரி. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசுப்பிள்ளை கோணேஸ்வரி என்ற 35 வயதான மூன்று பிள்ளைகளின் தாயார் அவரது பிள்ளைகளின் கண் முன்னால் வைத்து சிங்களப் படையினரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப், பின்னர் அவரது பிறப்புறுப்பில் கைக்குண்டை வெடிக்க வைத்துப் படுகொலை செய்த கொடூரம் உலகில் எங்கும் நடைபெற்றிராத பெரும் கொடூரம்.
இது உலகத் தமிழர்களையே பேரதிர்ச்சியடைய வைத்து, மனித நாகரீகத்தையே வெட்கித் தலைகுனிய வைத்தது. முள்ளிவாய்க்கால் போரின் பின்னர் அகப்பட்ட பல நூற்றுக் கணக்கான தமிழ்ப் பெண்கள் மிகக் கொடூரமாக வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். இதற்குச் சாட்சியமாக இசைப்பிரியா உட்பட ஏராளமான தமிழ்ப் பெண்களின் படங்கள் வெளியாகி உலகையே அதிர்ச்சியடைய வைத்தன. பெண்கள் மட்டுமல்ல தமிழ் ஆண்களும் சிங்கள இராணுவத்தின் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளானதை உலக ஊடகங்களும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருந்தன.
இந்நிலையில்தான், மோதல்களின் போது பாலியல் வன்முறைகள் நடப்பதைத் தடுக்கும் நோக்குடன் முதற் தடவையாக உலகளாவிய மாநாடு ஒன்று இலண்டனில் கடந்த 10ம் திகதி தொடங்கி 13ம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றிருக்கின்றது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் சிறப்புத் தூதரும் ஹொலிவூட் நடிகையுமான ஏஞ்சலீனா ஜோலி ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. யுத்தத்தின் போதும் மோதல் முடிவுக்கு வந்த பின்னரும் இடம்பெறும் வல்லுறவுகள் மற்றும் பாலியல் வன்முறை விவகாரங்களைக் கையாள்வதற்கான ஐ.நா.வின் பணியில் 2012ல் ஏஞ்சலீனா ஜொலி இணைந்திருந்தார். போரின்போது இடம்பெறும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரச்சார நடவடிக்கைகளை ஹேக்கும் ஜோலியும் இரு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் இம்மாநாடு நடைபெற்றுள்ளது.
மோதல்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான மிகப்பெரிய மாநாடாக இது அமைந்துள்ளது. இந்த மாநாட்டின் பிரகடனத்தின் மூலம் அளிக்கப்படுகின்ற உறுதிமொழிகளைப் பெண்கள், சிறார்கள் மற்றும் ஆண்களை பாலியல் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளாக மாற்றுவதே மாநாட்டின் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலண்டன் எக்ஸெல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 150ற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். மோதல்களின்போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரகடனத்தை அங்கீகரிக்கும் நாடுகள் மட்டுமே மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தனர். அந்தவகையில் மோதல்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா பிரகடனத்தை அங்கீகரித்த அனைத்து அரசாங்கங்களும் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் இராணுவ தொழில்சார் நிபுணர்களும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
ஆனால், இந்த மாநாட்டிற்கு இனப்படுகொலையில் ஈடுபட்ட சிறீலங்கா அழைக்கப்பட்டிருக்கவில்லை. போரில் தமிழர்கள் மீது பாலியல் வல்லுறவுக்கு கொடூரங்களைப் புரிந்திருந்த நிலையில் இம்மாநாட்டில் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ‘மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை’ என்பதை இலண்டனிலுள்ள சிறீலங்கா உயர்ஸ்தானிகரத்தின் துணைத் தூதர் நெவில் டி சில்வா ஒத்துக்கொண்டிருந்தார். ‘மோதல்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஐ.நா பிரகடனத்தை அங்கீகரிக்கும் அரசுகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மாநாட்டில் பங்குபற்ற விரும்பினோம். ஆனால், பிரகடனத்தை அங்கீகரிக்காத நிலையில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எங்களுக்கு கூறப்பட்டுள்ளது’ என நெவில் டி சில்வா கவலை வெளியிட்டிருந்தார். அத்துடன், ‘மோதல்களின்போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரகடனத்தை தமது நாடு மட்டுமன்றி, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அங்கீகரிக்கவில்லை’ என்றும் அவர் அவர்களையும் துணைக்கழைத்து தம்மை நியாயப்படுத்தியிருந்தார். அவர் கூறியுள்ள நாடுகளில் பாலியல் ஒடுக்குமுறைகள் இருந்துவரும் நிலையில், அந்நாடுகள் சிறீலங்காவின் இனப்படுகொலைக்கு துணைபோனவை என்பதும் தெரிந்ததே.
இதேவேளை, மாநாட்டில் அமைச்சர் வில்லியம் ஹேக் உரையாற்றுகையில் நவீன காலத்தின் மாபெரும் குற்றங்களில் ஒன்றாக பாலியல் வல்லுறவு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். 20வது மற்றும் 21வது நூற்றாண்டு காலத்தில் பாலியல் வன்முறை, போர் ஆயுதமொன்றாக கையாளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தூதுவர் அஞ்ஜெலினா ஜோலி உரையாற்றுகையில், பாலியல் வன்முறைகள் போரின் ஓர் ஆயுதம் என்று குறிப்பிட்டதுடன், இந்தக் கொடுமைகளைத் தடுப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும். எனினும், இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆரம்பம்தான் இந்த மாநாடு என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அத்துடன், மோதல்களின் போதான பாலியல் வன்முறைகளை விசாரிக்கவும், ஆவணப்படுத்தவும் சர்வதேச ரீதியாக எத்தகைய நடைமுறைகளை ஏற்படுத்துவது என்பது தொடர்பான ஆவணத்தை தயாரிப்பதற்கு மாநாட்டில் இணக்கம் காணப்பட்டதாகவும் அறியவருகின்றது.
இதேவேளை, பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிறீலங்காவினால் சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார். பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மாநாட்டின் ஆரம்ப நாளில் ஊடகவிலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் வில்லியம் ஹேக், அகதிகள் விடயத்தை பிரித்தானிய உள்துறை அமைச்சே கையாளுகிறது என்றும் எனினும், இந்த விடயத்தில் விசாரணை நடத்துவதாக அமைச்சு உறுதியளித்துள்ளதாக ஹேக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை பொறுத்தவரை அது அடைக்கலம் கோருவோருக்கு திறந்த நாடு எனினும் ஒழுங்குகள் உரிய முறையில் பேணப்படும். எவராவது இந்த ஒழுங்குகள் பேணப்படவில்லை என்று உணர்ந்தால், அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் ஹேக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் மீது மிகக்கொடூரமான ஓர் ஆயுதமாக இன்றுவரை பாலியல் வன்கொடுமையைச் சிங்களப் பேரினவாத அரசு பயன்படுத்தி வருகின்றது. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முதல் முயற்சி வெற்றியளிக்கவேண்டும். போரில் பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், அவ்வாறு நடந்துகொள்ளும் நாடுகளை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பதற்கு சர்வதேச சட்டங்களை வரையறுத்து, சர்வதேச கட்டமைப்பாக இது வியாபிக்கவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட உலகத் தமிழினத்தின் எதிர்பார்ப்பாகும். அந்த வகையில் உலகத் தமிழினம் விரும்பும் ஒரு மாநாடாக இது அமைந்துள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு
No comments:
Post a Comment