மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கை வருமாறு:
"புதிய பாரதப் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு இந்தியாவின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற கவலை தரும் செய்தியை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில், தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆகியோரின் மனஎழுச்சி மற்றும் கொந்தளிப்பு அனைவரும் நன்கு அறிந்தவையே.
நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்று, ஒரு சில நாட்களில் புதிய மத்திய அரசு பதவியேற்க இருக்கிறது என்றாலும், இந்த மாற்றம், தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்கெனவே உள்ள இறுக்கமான உறவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதியில், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள், இனப் படுகொலை மற்றும் இன அழிப்பு ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை இந்த நாடே, ஏன் இந்த உலகமே நன்கு அறியும்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை விடுத்ததோடு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி, விசாரணைக்கு அவர்களை உட்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்றை இந்தியா முன்னின்று கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
ஆனால், முன்பிருந்த மத்திய அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி, தமிழர்களின் உணர்வுகளை மிதித்துவிட்டது.
புதிதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் பரிவுடன் செயல்படுமென்றும், தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், புதிய பிரதமரும், புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்ப்பாக்கியமான செயல் தமிழ்நாட்டு மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தியுள்ளது. இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
புதிதாக மத்தியில் அமையவுள்ள அரசிடம் இதனை மிகுந்த மன வேதனையுடன் நாங்கள் சுட்டிக்காட்ட விழைகிறோம். தவறான ஆலோசனையின் பேரில் அமைந்த இந்தச் செயல் தவிர்க்கப்பட்டிருந்தால், புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக அமைந்திருக்கும்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment