April 29, 2014

கிளிநொச்சி அரச அதிபரின் கருத்தால் மக்கள் அதிர்ச்சி!

கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள்
களவாடப்பட்டமை தொடர்பில் தனக்கு எழுத்து மூலம் முறைபாடுகள் செய்யப்பபட்டால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களின் பணத்தை வசூலித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அவர்களைப் பாதுகாப்பதற்கு கிளிநொச்சி அரச அதிபர் முற்படுகின்றார் என்று விவசாயிகளும் மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சியில் பொதுமக்கள் மீள் குடியேற்றப்பட்டபோது விவசாயிகளுக்கு வழங்குவதற்கென இந்திய அரசினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களின் இரு சுழல் கலப்பைகளும் மேலும் சில உதிரிப்பாகங்களும் காணாமல் போயின.
இது தொடர்பாக  கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் இதுவரை எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், கமநல சேவை நிலையத்தின் பராமரிப்பில் உள்ள வயல் காணிகளின் குத்தகை பணம் என்பனவும் முறையற்ற வித்தில் கையாளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக்குக் குழுக் கூட்டம் அண்மையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது மாவட்ட விவசாய சம்மேளத்தின் தலைவர் செ.சிவப்பிரகாசம் மேற்படி விடயங்கள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் கேள்வியெழுப்பினார். அத்துடன் 2011ம் ஆண்டு விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் நீர் இறைக்கும் சூரிய மின்கலத் தொகுதிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு பயனாளிகளிடமிருந்து பெற்பட்ட பத்தாயிரம் ரூபாவிற்கு மேலதிக பெறப்பட்ட ஆயிரம் ரூபாய் மீண்டும் வழங்கப்படாமல் உள்ளமை தொடர்பாகவும் அதிகாரிகள் முன்னிலையில் அவர் கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட அரச அதிபர் குறித்த சம்பவங்கள் தொடர்பாக எழுத்து மூலம் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமிடத்து அவற்றை விசாரணை செய்து அடுத்து நடைபெறவுள்ள விவசாய ஒருங்கிணைப்புக் குழுக்;கூட்டத்திலே அதற்கு பதிலளிக்க முடியும் என்று மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment