April 26, 2014

பிரான்சில் தமிழ் மூதாளர் அவையின் ஓராண்டு ஆண்டு நிறைவு விழா!

பிரான்சு பாரிசு மண்ணில் கடந்த ஆண்டு உருவாக்கம் கண்ட தமிழ் மூதாளர் அவை தனது ஓராண்டு நிறைவையும், கலைநிகழ்வையும் 24.04.2014 வியாழக்கிழமை பிற்பகல் 14 மணிக்கு லாக்கூர்னேவ் என்னும் இடத்தில் அமைந்து மண்டபத்தில் நடாத்தியிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடரினை மாவீரர் மணிமாலனின் பெற்றோர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து வரவேற்புரையை மாவீரர் கேணல் பரிதி அவர்களுடைய தந்தை வழங்கினார். தொடர்ந்து திறான்சி தமிழ்ச்சங்க மாணவிகள் வரவேற்பு நடனத்தை வழங்கியிருந்தனர்.


தொடர்ந்து முதியோர்களின் கவிதை, பாட்டு, கதை, தனிநடிப்பு, நினைவுப்பகிர்வு, நகச்சுவை போன்றனவும் முதியோர்களால் நடாத்தப்பட்டது. சென்ற 2013ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இதே காலப்பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழ் முதியோர் அவை வாரத்தில் ஒவ்வொரு வியாழன் தோறும் தமது இடைவிடாத சந்திப்பையும், அவ்மாதத்தில் பிறந்தவர்களின் பிறந்த நாட்களை கொண்டாடுவதும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதும், ஓர்நாளை சந்தோசமாக களித்து வந்ததுடன் தமது நினைவுப்பகிர்வு களை மற்றவர்களுடன் பகிர்ந்து வந்தது அவர்களுடைய முதிர்ந்த வாழ்வில் கிடைக்கும் சொற்ப சந்தோசமாக கருதப்பட்டது.


நடைபெற்ற ஓராண்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு தாயின்  மகன், மருமகள் தாம் இங்கு நடைபெறுகின்ற இன்றைய காலத்துக்கு தேவையானதொரு செயற்பாட்டை கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் தனது பிறப்பிலேயே வாய்பேச முடியாத தனது தாயார் சிறிய வயதில் தம்மை வளர்ப்பதற்கு பட்ட கஸ்ரத்தையும், இன்று நான் நன்றாக இருப்பதற்கு காரணமான தாயை நல்ல வடிவாக பார்த்து வருவதையும் அதே நேரத்தில் இயந்திர மயமான புலம்பெயர் வாழ்வில் வயதானவர்கள் தனியே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காமல் இவ்வாறான அவர் வயதையொத்தவர்களோடு வாரத்தில் ஒருநாளேனும் சேர்ந்து பழகும் போது எந்த வித வருத்தம் துன்பமின்றி இருப்பதை தான் கண்டு கொண்டதாகவும் கண்ணீரோடு கூறியிருந்தார். இவ்வாறு உலகம் முழுவதும் எமது மூதாளர்களுக்கும் அவர்கள் மனதறிந்து இது போன்று செயற்படல் வேண்டும் என்று கூறியிருந்தார். மூதாளர்களின் அந்தநாள் ஞாபகங்கள் நகச்சுவையாக பயிரப்பட்டன. இலைமறை காயாக இருக்கும் மூதாளர்கள் பாடல்களையும், பேச்சுக்களையும் தந்திருந்தனர்.


நிகழ்வில் விருந்தினர்களாக அழைக்கப்பட்ட தமிழ் அறிஞர்கள் மூதாளர்களுடைய சிறப்பும், அவர்களிடம் உள்ள அபரீதமான திறமைகள், பழமைகள் அவர்களுடன் அழிந்து போகாது அடுத்த சந்ததிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர். இனிவரும் காலங்களில் ஏற்பாட்டாளர் அதில் கவனம் எடுத்து அவ்வாறானதொரு சந்திப்புக்களை வருடத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ செய்யப்போவதாக கூறியிருந்தனர். இவ் மூதாளர் அமைப்பை பொறுப்பெடுத்து அர்பணிப்போடு எந்த பிரதியுபகாரமும் பாராது செயற்பட்டு வரும் செயற்பாட்டாளர்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வளர்ச்சியடைந்த நாடுகள் அந்த நாட்டின் மூத்த தலைமுறையினரை ஒரு சொத்தகவே பார்த்து வருவதும் பராமரித்தும் வருகின்றனர்.


தமிழ் மக்களை பொறுத்தவரை புலத்தில் வாழும் எமது மூதாளர்கள் பல்வேறு வருத்தங்கள், மனவுளைச்சல்கள், கவனிப்பாரற்றதொரு நிலை என்கின்ற பல்வேறு துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த நாட்டின் மக்களுக்கு இந்த நாட்டு அரசுகள் உதவுவது போல எமது மக்களுக்கு எம்மால் பொருளாதார உதவிதான் செய்ய முடியாவிட்டாலும், அவர்களின் உள ஆரோக்கியத்தை கவனித்தில் கொண்டு சரீர உதவிகளை செய்ய வேண்டும் எனவும் இது ஒவ்வொரு தமிழர்களின் பல்வேறு கடமைகளில் இதுவும் ஒன்று எனவும் குறிப்பிட்டிருந்தனர். மாலை 6.30 மணிவரை பல்வேறு நிகழ்வுகளுடன் சிரிப்புகள் கலந்த சந்தோசத்துடன் சென்றிருந்தனர்.











No comments:

Post a Comment