கோப்பாய்- கைதடி வீதியில் கோப்பாய் சந்திக்கு அண்மையில், பொதுமக்களுக்குச் சொந்த மான 64 பரப்புக் காணியில் படையினருக்கு நிரந்தர
முகாம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோப்பய்- கைதடி வீதியில், கோப்பாய் சந்திக்கு அண்மையில் 2000 ஆம் ஆண்டு படை முகாம் அமைக்கப்பட்டது. குறித்த பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை அபகரித்தே முகாம் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது. நீண்டகாலமாக முகாம் தற்காலிக முகாமாகவே இயங்கி வந்தது. இந்த நிலையில் குறித்த படை முகாமை நிரந்தரமாக அங்கேயே அமைக்கும் நடவடிக்கைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. குறித்த பகுதியை கனரக வாகனங்களைப் பயன்படுத்தி படையினர் துப்புரவு செய்துள்ளார்கள் அதில் நிரந்தர படை முகாமை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சீன அரசால் வழங்கப்பட்டுள்ள படை தளபாடங்களை வைத்தே மேற்படி முகாமை நிரந்தரமாக அமைக்கும் செயற்பாட்டில் படையினர் ஈடுபட்டுள்ளனர். படையினர் முகாம் அமைத்துள்ள 64 பரப்புக் காணியும் தனியாருக்குச் சொந்தமானது என்று பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் குறித்த காணியை சுவீகரிப்பதற்கான அறிவித்தலோ அல்லது குறித்த காணி தேவை என்பது தொடர்பிலோ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் படையினர் எதுவும் கூறியிருக்கவில்லை.
திடீரென குறித்த காணிகளில் நிரந்தர முகாம் அமைக்கும் பணிகளை படையினர் ஆரம்பித்துள்ளனர். யாழ்.குடாநாட்டில் படைக் குறைப்புச் செய்யப்பட்டுள்ளது என்றும், பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது என்றும் படையினரால் கூறப்பட்டு வருகின்றது.
இந்தநிலையிலேயே பொதுமக்களின் காணிகளில் படைமுகாம் அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா பதவியேற்றவுடன், வீதிக்கு வீதி காணப்பட்ட சிறிய காவலரண்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. குறித்த காவலரண்களை இணைத்து பெரிய முகாம்களை அமைக்கம் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றே வருகின்றன.
No comments:
Post a Comment