August 19, 2016

கிளிநொச்சியில் கோத்தாபாய உத்தரவிட்ட பூங்கா!!!

கிளிநொச்சி நகரத்தின் மையப் பகுதியான டிப்போ சந்தியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் ஒரு ஓய்வுப் பூங்கா அமைக்கும் நடவடிக்கை கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது.


கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்தபோது இந்த ஓய்வுப் பூக்காவை அமைக்க பணிக்கப்பட்டிருந்தது.

குறித்த காணி நகர சபைக்குச் சொந்தமான காணி என்றும் அதில் அரச நிறுவனங்களே இடம்பெறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டபோதும் கோத்தபாயவின் உத்தரவு காரணமாக அக் காணி விடுவிக்கப்படவில்லை.

குறித்த காணியின் முன்பாக பாரிய போர் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவதாகவே ஓய்வு பூங்காவை அமைக்கும் யோசனையை கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ளார்.

சிறுவர்களுக்காக விடுதலைப் புலிகள் பூங்கா அமைத்த நிலப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளை அழித்து பெற்ற வெற்றியை நினைவுபடுத்தும் சின்னமாக சித்திரித்து போர் வெற்றி நினைவுத் தூபியை அமைத்துள்ளனர்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் அருகில் இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத் தூபி கிளிநொச்சி நகர மக்களின் மனங்கள் போர் நினைவைத் தூண்டுவதாக அமைந்துள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறிப்பாக இது பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறார்கள் மத்தியில் மன வடுவை உருவாக்கும் நினைவுத் தூபி என்றும் இதனை அகற்ற வேண்டும் என்றும் அண்மையில் கிளிநொச்சியில் நடந்த நகர அபிவிருத்திக் கூட்டத்தில் பலரும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது..

அத்துடன் குறித்த போர் நினைவுத் தூபியின் முன்பாக அமைக்கப்படும் ஓய்வுப் பூங்கா குறித்த சூழலுக்குப் பொருத்தமற்றது என்றும் அதனை நகரத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அதனை பிரதேச நகர அபிவிருத்தி குழுவே தீர்மானிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த நிலையில் குறித்த ஓய்வுப் பூங்காவை அமைக்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் ஆட்சேபனையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னைய ஆட்சிக் காலத்தில் சட்டத்திற்கும் பிரதேச சபையின் அனுமதியின்றியும் பொருத்தமற்ற வகையிலும் கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட உத்தரின் பெயரிலும் இராணுவ நோக்கம் கருதியும் உத்தரவிட்ட ஓய்வுப் பூங்கா அமைக்கும் நடவடிக்கை நல்லாட்சி அரசு நிறுத்த வேண்டும் என்று கிளிநொச்சி பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment