August 18, 2016

விசேட அதிரடிப்படையின் தலைவராக லத்தீப் பொறுப்பேற்பதில் சிக்கல்!

விசேட அதிரடிப்படை தலைவராக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், எம் ஆர் லத்தீப் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டபோதும் அவர் பணிகளை ஏற்றுக்கொள்ள இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


உயர் அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 4ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைய, லத்தீப்பின் பெயரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் பரிந்துரைத்தது.

இதன்படி அவர் ஆகஸ்ட் 9ஆம் திகதி முதல் தமது கடமைகளை பொறுப்பேற்கவேண்டும்.

எனினும், அவர் பதவிவிலகவேண்டும் என்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் அரசியல்வாதி ஒருவரின் மகனே இந்த அழுத்தங்களை கொடுத்துவருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று இது தொடர்பாக பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லத்தீப், விடுதலைப்புலிகளுக்கு எதிராக லண்டன், பேங்கோக், ஜெனிவா ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்ஸின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுயாதீன ஆணைக்குழுக்களின் எதிர்காலம் குறித்த கவலையில் ராஜதந்திர தரப்புகள்!

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப், இதுவரை நியமிக்கப்படாமை தொடர்பில் ராஜதந்திர தரப்புகள் கூடிய கவனத்தை செலுத்தி வருகின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாகவே பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையை செயற்படுத்த பொலிஸ் மா அதிபர தவறியுள்ளதாக ராஜதந்திர தரப்புகளுக்கு தெரியவந்துள்ளது.

இவ்வாறான அழுத்தங்கள் மூலம் இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் எதிர்காலத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ராஜதந்திர தரப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி செயலம் கொடுத்துள்ள இந்த அழுத்தத்திற்கும் ஜனாதிபதிக்கும் சம்பந்தம் இல்லை என்றால், அந்த தவறை திருத்திக்கொள்ள போதுமான காலம் இருந்தது, எனினும் ஜனாதிபதி இதுவரை அந்த தவறை திருத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில் ராஜதந்திர தரப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப்பிற்கு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பதவியை வழங்காது, அவருக்கு வெளிநாட்டு தூதரக சேவையில் பதவி ஒன்றை வழங்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் லத்தீப் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இது தான் கோரிய விடயம் அல்ல எனக் கூறியுள்ளார்.

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நியாயமாக ஆராய்ந்து வழங்க பரிந்துரைத்த பதவியை வழங்குவதற்கு பதிலாக தெரியாத தூதுவர் பதவி தனக்கு அவசியமில்லை எனவும் லத்தீப் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரை செயற்படுத்தப்படாமை தொடர்பில் அரசியலமைப்புச் சபையும் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை, அரசியலமைப்புச் சபையே நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment