August 5, 2016

மாணவர்களின் பாதுகாப்புக்கு ஜனாதிபதி உத்தரவாதம் - கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க அழைப்பு!

யாழ். பல்கலைக்கழக சமூகத்தையும், நிர்வாகத்தையும் அழைத்து கலந்துரையாடிய சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சிங்கள மாணவர்களை வகுப்புகளுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது.

 
கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பிற்கு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் விரிவுரையாளர்கள் உட்பட பெற்றோர்கள் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சிங்கள மாணவர்களின் பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த யூலை மாதம் 16 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கண்டிய நடனத்தை புகுத்த சிங்கள மாணவர்கள் முற்பட்டதால் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை அடுத்து சிங்கள தமிழ் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டிருந்தது. இதனை அடுத்து இந்தப் பிரச்சனை இனவாதப் பிரச்சனையாக மாற்றப்பட்ட நிலையில் சிங்கள மாணவர்கள் தமக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாகத் தெரிவித்து பல்கலைக்கழகத்திற்கு திரும்ப மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனைத்துத் தரப்பினரையும் அழைத்து நேற்று கலந்துரையாடினார். யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முனவதாக குற்றம்சாட்டிய ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேன இந்த நடவடிக்கைகளால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முடக்க இடமளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகம் காலம் காலமாக நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்ததாகத் தெரிவித்த சிறிலங்கா ஜனாதிபதி, ஏனைய பல்ககலைக்கழகங்களைப் போல் எதற்கு எடுத்தாலும் மாணவர்கள் ஆரப்பாட்டங்களை நடத்துவதோ, வீதியில் இறங்கி போராடுவதோ இல்லை என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

இவ்வாறான ஒரு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட துரதிஸ்டவசமான சம்பவத்தை தொடர்ந்துகொண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்கச் செய்ய இடமளிக்க முடியாது என்றும் கூறிய அவர் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் சிங்கள மாணவர்கள் அச்சமின்றி திரும்ப முடியும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை தமிழ் சிங்கள மாணவர்களை முரண்பாடுகளை களைந்து கற்றலில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது சிங்கள மாணவர்களுக்கான அனைத்து பாதுகாப்பையும் தாம் உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அதற்குப் பின்னரும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலும் சிங்கள மாணவர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தனர்.

இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியும் கலந்துகொண்டிருந்த இந்த சந்திப்பில், மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவங்கள் இடம்பெறும் போது மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு பொலிசார் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது மாணவர்களுக்கிடையிலான சுமூகமான உறவைக் கட்டியெழுப்பவும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அங்கம் வகிக்கும் குழுவொன்றையும் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல்களின் போது உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கேரு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment