August 15, 2016

ரியோ ஒலிம்பிக்கில் கலக்கும் ஈழத்தமிழன்!

இன்று துளசி தர்மலிங்கம் எனும் ஈழத்தமிழன் ரியோ ஒலிம்பிக் போட்டியில் மங்கோலியர் CHINZORIG BAATARSUKH இற்கு எதிராக தனது முதலாவது குத்து சண்டையை ஆரம்பிக்கிறார்.


தனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி தருமலிங்கம் இன்று கட்டார் நாட்டுக்காக விளையாடுகிறார்.

இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி(மாறன்) தர்மலிங்கம் கடந்த ஆண்டுவரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கின்றார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார். உலகத்தரத்ததில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழுமுறை நகரச்சுற்று வட்டத்திலும், ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், ஒரு தடவை யேர்மனி நாட்டின் சம்பியனாகவும் வந்திருக்கின்றார்.

யூலை 7ந் திகதி அன்று நடந்த Light Welterweight மூன்று சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்ரினா நாட்டைச் சேர்ந்த Carlos Aquino வீரனை 3-0 என்ற புள்ளியில் வென்று ரியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தெரிவாகி இருக்கின்றார்.

இதுவரை தன்னுடன் போட்டியிட்ட தென் ஆப்ரிக்கா, சீனா, உக்ரெயின், போலந்து , சுவிற்சலாந்து, பொஸ்வானா நாட்டு குத்துச்சண்டை வீரர்களை வென்ற துளசி தருமலிங்கம், ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் அனைத்து நாட்டு வீரர்களையும் வென்று பதக்கம் பெற்று வர நாங்களும் வாழ்த்துவோம் .



No comments:

Post a Comment