April 19, 2015

இலங்கையில் வாழ முடியாது! மீண்டும் அடைக்கலம்!

இலங்கையில் மோசமான வாழ்க்கை நிலைமை காணப்பட்டதால் இன்று வெள்ளிக்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த சமயத்தில் திருகோணமலையைச் சேர்ந்த சத்தியசீலம், அவரது மனைவி பரமேஸ்வரி, மகள்களான விடுதலைசெல்வி, மேரி, அஞ்சலிதேவி ஆகியோர் 1999 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் இராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர்.
2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாய்நாடான இலங்கைக்கு வர விரும்பிய அவர்கள், அதற்கான சட்ட நடைமுறைகளை முடித்த பின்னர் இலங்கையை வந்தடைந்தனர்.
இலங்கையில் வாழ்ந்த 5 வருடங்களிலும் வசிப்பதற்கு வீடின்றி தாம் கஷ்டங்களை அனுபவித்தனர் என்றும் தவிர அங்கு வாழ்வதற்கான சூழ்நிலைகள் மோசமாக இருக்கின்றன என்றும் தெரிவித்தனர். இதனாலேயே தாம் அங்கிருந்து மீண்டும் அகதிகளாக இந்தியாவை வந்தடைந்தனர் எனப் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
தனுஷ்கோடி கடற்கரை அருகில் உள்ள அரிச்சல்முனையை சென்றடைந்த இவர்கள் படகில் இந்தியா செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தினர் எனப் பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment