July 23, 2016

சுயம் தேடத் தூண்டிய கறுப்பு யூலை -Tamil women - தமிழ் மகளிர் நோர்வே!

தமிழீழ மக்களின் மனங்களில், ஆறாத ரணமாய் பதிந்துபோய்விட்ட கறுப்புயூலையின் கொடும் நினைவுகள், வரலாற்று ஓட்டத்தில் 33 ஆண்டு நீண்ட நெடிய ஆண்டுகளைத் தொட்டுவிட்டது.

என்றாலும், சிங்கள இன அழிப்பின், அந்தக் கோரம் இன்னமும், இரத்தவாடை போகாமலும், அவலக்கூக்குரல்களின் அதிர்வுகள் அடங்காமலும், இயலாமைச் சிறையில் தமிழர்கள் அச்சம் பயம் பீதி நிறைந்த கணங்களில் செய்வதறியாது திகைத்து நின்ற அந்த அவலக்காட்சிகளின் பதிவுகள் குலையாமலும் இன்னமும் எம்மைச் சூழ்ந்தே உயிர்ப்போடு காணப்படுகின்றன.
இலங்கைத் தீவில், சிங்களவர்கள் வாழும் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள், விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டனர். துண்டாடப்பட்டனர். தீயில் உயிரோடு வீசப்பட்டனர். வாகனங்களோடு கொழுத்தப்பட்டனர். தாறுமாறாக விலங்குகள் போலத் தாக்கப்பட்டனர். அசிங்கப்படுத்தப்பட்டனர், அவமானப்படுத்தப்பட்டனர். சீரழிக்கப்பட்டனர்.
தம் நீண்டகாலக் கடின உழைப்பால் சிறுகச் சிறுகச் சேகரித்த பணம், நகைகள், சொத்துக்கள் சில மணித்துளிகளில் முற்றாகக் கொள்ளையிடப்பட்டும், வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டும் அநாதைகளாக, வீதிகளில் கைவிடப்பட்டனர் தமிழர்கள். சிறைச்சாலைகளிலும், தமிழர்கள், சிங்கள அதிகாரிகள், படையினரின் முன்னிலையில், அவர்களின் துணையுடன் சிங்களக் காடையர்களால் குத்திக் குதறிக் கொல்லப்பட்டனர்.தமிழர்கள் மீதான சிங்கள இனவெறியின் குமறல், கறுப்பு யூலையாய் இரத்தச் சிதறல்களுடன், மரண ஓலங்களுடன் 1983 யூலையில் பதிவாயிற்று.யாவும் சிங்கள அரசின் அங்கீகாரத்துடன் ஆசியுடன் நடைபெற்ற, வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட இனஅழிப்பின் இரத்த சாட்சியங்கள்.
சிங்கள அரசின் நீதி நிர்வாகம், சட்டம் ஒழுங்கில், தமிழர்கள் பாதுகாப்பாய் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை என்ற செய்தியை பகிரங்கமாக உணர்த்தியது கறுப்பு யூலை.
சிங்களப் பகுதிகளில் இருந்து தமிழர்கள் தமது தாயகம் நோக்கி உடுத்த உடையுடன் அகதிகளாக விரட்டப்பட்ட அந்தக் கொடுமையிலும், தமிழர்களுக்காக தாயக பூமியே அவர்களின் நிரந்தரப் பாதுகாப்பிற்கு உரிய இடம் என்பதை உணரவைத்தது கறுப்பு யூலை.தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட எந்தக் கொடுமைக்கும், சிங்கள அரசிடம் இருந்து, எந்த நீதியம், நியாயமும், கிடைக்காது என்ற வரலாற்றுப் பாடத்தையும், சிங்கள அரசிடம் இருந்து தமிழர்கள் பாதுகாப்புப் பெறமுடியாது என்ற உண்மையும் வெளிப்பட்டதுடன், தமிழர்கள், தமக்கான தாயகத்தில், தமது ஆட்சியதிகாரங்களை நிறுவுவது மாத்திரமே, தமிழினத்தின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என்ற தெளிவான நிலைப்பாட்டிற்கு தமிழர்களை உந்தித் தள்ளியது கறுப்பு யூலை.
ஆண்டபரம்பரைக் கதைகளின் அத்திவாரங்களைக் குடைந்து, தமிழர்தம் சுயம் தேடத் தூண்டியது கறுப்பு யூலை.சிங்களப் பகுதியில், தேக்கப்படும் தமிழர்களின் உழைப்பு தேட்டம் யாவும், எந்தக் கணத்திலும், சிங்களத்தால் பிடுங்கப்படும் என்ற உண்மையையும் கறுப்புயூலை தெளிவாகச் சொன்னது.
33 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே நிலைதான் இன்றும் நீடிக்கின்றது. மாற்றங்கள் இன்றி அதேகொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன.
இன்று யாவும் நிறுவனமயப்பட்டு, தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் யாவும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.
நில அபகரிப்புக்கள், சிறைப்படுகொலைகள், பௌத்தமத விஸ்தரிப்புக்கள், தமிழர்களின் சொத்து அபகரிப்பு என்பன அரசாங்கத்தால் பகிரங்கமாக மேற்கொள்ளப்படுகின்றன.
ஜே.ஆர். ஆட்சிக்காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இக்காடைத்தனங்கள், காட்டுமிராண்டித்தனங்கள், தற்போதைய மைத்திரி ஆட்சிக்காலத்தில், நவீனபாணியில், வீரியத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழர் தாயகத்தின் தேவையின் அவசியம் மேலும் மேலும் உறுதி பெறுகின்றது. தமிழ் மக்கள் தமது சுதந்திர தமிழீழத்தை அடைவதே, கறுப்பு யூலைகளுக்கான முற்றுப் புள்ளி.
அதற்காக உழைப்பதே கறுப்பு யூலையை நினைவு கூறுவதின் அர்த்தமாக அமையமுடியும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
Tamil women - தமிழ் மகளிர் நோர்வே

No comments:

Post a Comment