July 7, 2016

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்பது ஜனாதிபதியின் தனிப்பட்ட கருத்து!

யுத்தக் குற்றம் குறித்த உள்ளக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனினும், இது அவரின் தனிப்பட்ட தீர்மானம் எனவும், அது அரசாங்கத்தின் தீர்மானம் அல்லவெனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விடயம் தொடர்பாக பல்வேறான கருத்துக்கள் காணப்படுகின்றன.

எனினும், குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் இன்னுமும் தீர்மானம் எடுக்க வில்லை. இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரின் நிலைப்பாட்டை கூறியுள்ளார்.

அது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். அவரின் கருத்துக்களுக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம். எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து ஆராய்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பார்கள்.

இந்த முடிவானது, பாதிக்கப்பட்ட தரப்பினரில் பெரும்பான்மையானோரால் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்றாக இருக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயத்தில் முக்கியமானது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாகும். எந்த வகையிலும் அது எமக்கு மாத்திரம் திருப்தியை அளிப்பதாக இருந்து விடக்கூடாது.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். எனவே குறித்த விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment