July 7, 2016

எங்களை நிம்மதியாக படிக்க விடுங்கள்! கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை!

தாம் நிம்மதியாக கல்வி கற்க உதவுமாறு வவுனியா விவசாய கல்லூரி பழைய மாணவர்களும், புதிய மாணவர்களும் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

பல மாணவர்கள் பல்வேறு இலட்சியங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனுமே கல்வி கற்கின்றனர். எமது குடும்பங்கள் கூட பல்வேறு கஸ்ட நிலைகளுக்கு மத்தியிலேயே எம்மை படிக்க வைத்துள்ளார்கள்.

இன்று தென்னிலங்கையில் உள்ள பல்கலைக்கழங்களிலும், கல்லூரிகளிலும் அவ்வப்போது ஏற்படும் அசாம்பாவிதங்கள் தாங்கள் அறியாதது அல்ல.

அதற்காக தாங்களும் குரல் கொடுத்திருப்பீர்கள். அத்தகைய அசம்பாவிதங்களால் பல மாணவர்கள் கல்வியை இடைநிறுத்திய சம்பவங்கள் கூட உள்ளது.

இன்று வடக்கு, கிழக்கு தமிழ் மொழி பேசும் மாணவர்கள் அச்சமில்லாது யாழ் பல்கலைக்கழகத்தில் கற்பது போன்று, விவசாயத்துறை மாணவர்கள் எமது கல்லூரியிலேயே கற்கிறார்கள்.

பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் வடபகுதியில் அமைக்கப்பட்ட எமது விவசாய கல்லூரியில் தற்போது கற்கின்ற மாணவர் தொகையை அதிகரிக்க வேண்டும் என நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல்

செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமையவுள்ளதை அறிந்து மிக்க வேதனையும் மனவருத்தமும் அடைகின்றோம்.

பொருளாதார மத்திய நிலையம் என்ற புதுப்பொலிவுடன் வரவுள்ள மொத்த மரக்கறி விற்பனை மையம் எவ்வாறு இருக்கும், அதன் சூழல் எவ்வாறு இருக்கும், அங்கு நாளாந்தம் எத்தனை வாகனங்கள் வந்து செல்லும் என்பது சிந்திக்கப்பட வேண்டியது.

இதுவரை காலமும் அமைதியான சூழலில் கற்று கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் எமது கல்லூரி முன்பாக அமைக்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக எமது கல்விக்கான அமைதியான சூழல் குழப்பமடைவதுடன் கற்றல் செயற்பாடுகளும் பாதிப்படையும்.

எனவே, உங்கள் பிள்ளைகள் உள்ள மாணவர்களாகிய எமது எதிர்கால நலன்களை முன்னிறுத்தி எமது விவசாய கல்லூரி முன்பாக பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்காது வேறு ஒரு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் ஐயா, கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களிடம் உருக்கமாகவும், அன்பாகவும் கோரிக்கை விடுகின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment