July 5, 2016

சாதி கடந்த திருமணம் தேச நலனுக்கானது!- ஆணவக்கொலை வழக்கில் நீதிபதி கருத்து!

உடுமலைப் பேட்டையில் நடந்த ஆணவக் கொலையில் சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தற்போது அவரது மனைவி கவுசல்யா சங்கரின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சங்கரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எஸ். வைத்தியநாதன்,ஜாமீன் வழங்க இயலாது என்று தீர்ப்பளித்து, கவனிக்கப்பட வேண்டிய சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மிக முக்கியமான காலத்தில்,மாற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டிய நிலையில் நமது தேசம் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் மிக முக்கியமான பொதுநலன் குறித்த, இது போன்ற வழக்கில் நீதிமன்றம் மௌனமாக இருந்து விட முடியாது.

இந்த தேசத்தின் சாபம் சாதி அமைப்பு . அதனை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ? அத்தனை விரைவாக அழிப்பது நல்லது. தேசத்தின் முன் எழுந்து நிற்கும் மிகப் பெரிய சவால் இது.

இதனை அனைவரும் ஒன்றுபட்டுத்தான் சந்திக்க வேண்டும். எதிர்க்க வேண்டும். சாதி தேசத்தை பிளவுபடுத்துகிறது. சாதிகளைக் கடந்த திருமணம் சாதியை அழிக்கிறது.

அதனால் அது தேசத்துக்கு அவசியமானது. தேச நலனுக்கு சாதி கடந்த திருமணங்கள் அவசியமாகின்றன.

நாட்டின் பல பகுதிகளிலும் சாதி கடந்து திருமணம் செய்பவர்களுக்கு பல வழிகளில் இன்னல்கள் கொடுக்கிறார்கள் என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

சாதி கடந்த திருமணத்தில் ஈடுபடும் இளைஞர்கள் இளம்பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

எமது கருத்தின்படி வன்முறைச் செயல்கள் முற்றிலும் சட்ட விரோதமானவை.

இது போன்ற குற்றங்களைச் செய்பவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும்.

இது ஒரு ஜனநாயக நாடு.

இந்த நாட்டில் வயதுக்கு வந்த எவரும் தனது விருப்பப்படி தனது துணையைத் தேர்வு செய்ய உரிமை கொண்டவர்கள்.

இதனை அரசும் பொலிஸ் துறையும் உறுதி செய்ய வேண்டும்.''

No comments:

Post a Comment