July 7, 2016

இளைஞர்களால் எதையும் சாதிக்கமுடியும் ; பசுபதிப்பிள்ளை!

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ள உழவனூர் தம்பிராசபுரம் வள்ளுவர் விளையாட்டுக்கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2016 ஆம் ஆண்டிற்கான மென்பந்து சுற்றுக்கேடயப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் விளையாட்டுக்கழகங்கள் விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி தங்களுடைய கழகங்களின் மதிப்பையும் கௌரவத்தையும் பேணி வருகிறது.

பாடசாலைகளுக்கு அடுத்தபடியாக சமூக நடத்தைகளையும் பண்பாட்டையும் இளையோருக்கு போதிக்கின்ற இடமாக விளையாட்டுக்கழகங்கள் திகழ்கின்றன. ஆனால் இன்றைய இளைய சமூகத்தில் பலர் கலாசார விடயங்களிலும் விளையாட்டு நிகழ்வுகளிலும் ஆர்வமின்றி சமூகப்பிறழ்வான நடத்தைகளில் ஆர்வமுள்ளவர்களாக திசைமாறிச் செல்கின்றனர்.

இளைஞர்களால் எதையும் சாதிக்கமுடியும். அது எம் கண்முன்னே நடந்துள்ளது. இருபது இருபத்தைந்து வயதுடைய இளைஞர்களே தங்களது உயிர்களைத் தியாகம் செய்து தமது எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பாகவும் ஒழுக்கமாகவும் இருக்கவேண்டும் என்று சிந்தித்தார்கள். ஆனால் இன்று அதே வயது இளைஞர்கள் சிலர் தவறாக சிந்தித்து தவறாக செயற்பட்டு சமூகத்தை அழிவுக்கு இட்டுச் செல்கிறார்கள்.

எனவே விளையாட்டுக் கழகங்கள்  போட்டிகளை நடத்துவதும் பரிசளிப்பதற்கும் மேலதிகமாக தமது கிராமத்து இளையவர்களை பாதுகாக்கின்ற வேலைத்திட்டங்களை களத்திலிருந்து செயற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இந் நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி அமைப்பாளர் மு.கஜன், புன்னைநீராவி இணைப்பாளர் தீபன், இளைஞர் அணி இணைப்பாளர் சுரேன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசில்களையும் வெற்றிக்கேடயங்களையும் வழங்கி கௌரவித்தார்கள்.

இறுதிப்போட்டியில் புதுக்குடியிருப்பு சென் அன்ரனீஸ் அணி கிளிநொச்சி கிருஸ்ணபாரதி அணியுடன் மோதி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.




No comments:

Post a Comment