July 7, 2016

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது ஏன்?

உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் வார்த்தை `பிரெக்ஸிட்'. ஐரோப்பிய யூனியனின் மிக வலுவான பிரிட்டன் அதில் இருந்து விலக வேண்டும் என்னும் முடிவை மக்களே எடுத்திருப்பது பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்கிற அச்சத்தை விதைத்திருக்கிறது.


ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் ஏன் விலகுகிறது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள, இந்த ஐந்து கேள்விகள் உதவும்.

1. ஐரோப்பிய யூனியன் என்றால் என்ன?

இன்னோர் உலகப்போர் மூளாமல் இருக்க வேண்டுமானால், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படவேண்டும்.அதற்கு தேச எல்லைகளைக் கடந்து, ஒரு பெரிய குடையின் கீழ் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுதிரண்டு தங்களுக்குள் தடையற்ற அரசியல், பொருளாதார, வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் தொடங்கப்பட்ட ஓர் அமைப்புதான் ஐரோப்பிய யூனியன்.

வெவ்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் இயங்கிவந்த இந்த அமைப்பு, 1993-ம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனாக மலர்ந்தது.பிரிட்டனின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. மக்கள்தொகை 50 கோடிக்கும் அதிகம். உலக மக்கள்தொகையில் இது ஏழு சதவிகிதம். 28 உறுப்பு நாடுகளில் 26 நாடுகள் மேலான வாழ்க்கைத்தரம் கொண்டவை. ஐரோப்பிய யூனியனின் பொதுவான நாணயம், யூரோ. 2012-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் வென்றது. சர்வதேச அளவில் செல்வாக்கு உள்ள ஒரு சூப்பர் பவர் கூட்டமைப்பு ஐரோப்பிய யூனியன்.

2. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது ஏன்?

1973-ம் ஆண்டு `ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகம்' என்னும் பெயருடன் ஐரோப்பிய யூனியன் இயங்கிவந்தபோது, பிரிட்டன் இந்த அமைப்பில் இணைந்துகொண்டது. ஆனாலும் ஆரம்பத்தில் இருந்தே பிரிட்டனில் ஒரு பெரும் பிரிவினர் இந்த இணைப்பை ஏற்கவில்லை. `மாபெரும் சாம்ராஜ்ஜியமாக இருந்த நாம், சிறிய நாடுகளுடன் ஒன்றுசேர்ந்து ஒரு பொட்டலத்தில் சுருங்கிவிடுவதா?' என அப்போதே முணுமுணுத்தனர்.

யூரோ என்னும் பொது நாணயத்தை, தொடக்கத்தில் இருந்தே ஏற்காமல் தனது பவுண்டையே பிரிட்டன் பயன்படுத்தி வந்திருக்கிறது. மற்ற உறுப்பு நாடுகளைப்போல் இல்லாமல் தன் எல்லைகளை சுதந்திரமாகத் திறந்துவைக்காமல் வேலி போட்டுக்கொண்டு பாதுகாப்பாகவே இருந்தது. இருந்தாலும், ஓர் அளவுக்கு மேல் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலன் கொடுக்கவில்லை. இதனால் ஐரோப்பிய யூனியனுக்காக தனது எல்லைகளைத் திறந்தது பிரிட்டன். இதனால் வளமான நாடான பிரிட்டனை நோக்கி பலவீனமான ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பிழைப்புக்காகத் திரண்டுவரத் தொடங்கினர்.

இது பிரிட்டனின் வலதுசாரிகளுக்குப் பிடிக்கவில்லை. `நாமே தடுமாறிக்கொண்டிருக்கும்போது அந்நியர்கள் பலர் உள்ளே நுழைவதையும் நம் வேலைகளைப் பறித்துக்கொள்வதையும் நம் வளங்களையும் வாய்ப்பு களையும் பங்குபோட்டுக்கொள்வதையும் அனுமதிக்கக் கூடாது' எனக் குரலெழுப்பத் தொடங்கினார்கள். 2008-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, இந்த அதிருப்தியாளர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. பல ஐரோப்பிய நாடுகள் செல்வாக்கு இழந்து, செல்வம் இழந்து தடுமாறத் தொடங்கியதைக் கண்டு, இவர்கள் மேலும் எரிச்சல் அடைந்தனர். ‘

மற்ற யூனியன் நாடுகளைப்போல் நாமும் யூரோவை ஏற்றிருந்தால், இந்நேரம் இவர்களோடு சேர்ந்து மண்ணைக் கவ்வியிருப்போம். பவுண்ட் இருந்ததால்தான் தப்பித்தோம். ஐரோப்பிய யூனியன் என்பது புதைகுழி என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் விழித்துக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு நல்லது’ என்று அவர்கள் முழங்கியபோது மக்கள் அதை ஏற்கத் தொடங்கினர்.

இதனால் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்திருக்க வேண்டுமா... வேண்டாமா என வாக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் எதிர்காலத்தை முடிவுசெய்வோம்' என 2012-ம் ஆண்டு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் அறிவித்தார்.மக்கள் தங்கள் முடிவை ஜூன் 23-ம் தேதி வெளிப்படுத்தினார்கள். 48.1 சதவிகிதம் பேர் இருக்கவேண்டும் என்றும், 51.9 சதவிகிதம் பேர் வெளியேறவேண்டும் என்றும் வாக்களித்தனர். பிரிட்டன் பிரிந்துசென்றது.

3. இது பிரிட்டனுக்கு நல்லதா?

ஒரு சுதந்திர நாடு, தன் நாட்டுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். இன்னோர் அமைப்பிடம் நம்மை ஆள்வதற்கான அதிகாரத்தை அளிக்கக் கூடாது' என்கிறார்கள் வெளியேற வேண்டும் என விரும்பி வாக்களித்தவர்கள். பழைமைவாதிகளும் வலதுசாரிகளும் மட்டுமே இப்படி விரும்பினார்கள் எனச் சொல்ல முடியாது.

உதாரணத்துக்கு, பிரிட்டன் பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவருமான டேவிட் கேமரூன், பிரிட்டன் வெளியேறக் கூடாது என்றே சொல்லிவந்தார். ஆனால், அவருடைய கட்சியைச் சேர்ந்த பலருக்கு இதில் உடன்பாடு இல்லை.மற்றொரு பக்கம், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும் `தீவிர இடதுசாரி' என அழைக்கப் படுபவருமான ஜெரிமி கோர்பின், பிரிட்டன், யூனியனில் சேர்ந்திருக்க வேண்டும் என்றே பிரசாரம் மேற்கொண்டுவந்தார். `

ஐரோப்பிய யூனியன் என்பது மிகப் பெரிய ஒன்றுபட்ட ஒரு சந்தை. அதில் இருந்து வெளியேறுவதன் மூலம் மில்லியன்கணக்கான வருவாயை நாம் இழக்கவேண்டிவரும். பலர் வேலை இழப்பார்கள்' என்கிறார் கார்பின். யூனியனில் உள்ள பிரச்னைகளை அங்கு இருந்தபடியே தீர்ப்பதும், அவற்றைத் தீர்க்க உதவுவதும்தான் பிரிட்டனின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது அவர் நிலைப்பாடு.

4. வாக்கெடுப்பின் விளைவுகள் என்னென்ன?

முதல் முக்கிய விளைவு, டேவிட் கேமரூனின் ராஜினாமா. மக்களின் மனநிலை மாறியுள்ளது.அதற்கு ஏற்ப நாட்டை புதிய திசையில் அழைத்துச் செல்லவேண்டிய பணியை, இன்னொருவர் ஏற்று நடத்துவதே சரியாக இருக்கும் என்னும் காரணத்தை முன்வைத்து, அவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

வரும் அக்டோபர் வரை அவர் பதவியில் நீடிப்பார்.அடுத்து, பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. இது தற்காலிகப் பின்னடைவுதான் என்றாலும் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவேண்டிய பொறுப்பு பிரிட்டனுக்கு இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் எழும் அச்சங்களையும் சந்தேகங்களையும் அரசு நிவர்த்திசெய்ய வேண்டியிருக்கும்.

நன்றி, வணக்கம்' என யூனியனிடம் இருந்து விடைபெற்றுவிட முடியாது. சேர்ந்து அமர்ந்து பல அரசியல், வர்த்தக, நிதி சார்ந்த ஒப்பந்தங்களைக் கவனித்து, வெளியேற்றத்தைச் சுலபமாகவும் சுமுகமாகவும் நடத்தி முடிக்க வேண்டும். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் செயல்படும் பிரிட்டிஷ் நிறுவனங்களும், பிரிட்டனில் உள்ள பிறநாட்டு நிறுவனங்களும் தொடர்ந்து இயங்குவது எப்படி என்பதை விவாதிக்க வேண்டும்.

அடுத்தது, அடையாளச் சிக்கல். பிரிட்டனிடம் இருந்து வெளியேற வேண்டும் என வலுவாகக் கோரிவரும் ஸ்காட்லாந்துக்கு, இந்த வாக்கெடுப்பு மிகுந்த நம்பிக்கையை அளித்திருக்கிறது. ஐரோப்பிய யூனியனிடம் இருந்து பிரிட்டன் பிரிந்ததைப்போல், நாமும் ஒரு வாக்கெடுப்பின் மூலம் பிரிட்டனிடம் இருந்து பிரிந்துவிட முடியும் என அது நினைக்கிறது.

இது உண்மையாகி விட்டால், பிரிட்டனை இனி `பிரிட்டன்' என்றுகூட நாம் அழைக்க முடியாது. காரணம், இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய ‘நான்கு நாடுகள்’ இணைந்த பகுதியைத்தான் `பிரிட்டன்' என்று நாம் இன்று அழைக்கிறோம்.

5. ஐரோப்பிய யூனியன் இனி என்னாகும்?

பிரிட்டன் வெளியேறியது எங்களைப் பாதிக்காது' என்றுதான் ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. ஆனால், பலமான ஒரு நாடு வெளியேறியது மற்ற நாடுகளைப் பாதிக்கக்கூடும். 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்த நாடுகள் பல இன்னமும் மீளவே இல்லை என்பதால், அவர்களும் பிரிட்டிஷ் மக்களைப்போல் யூனியன் மீது அதிருப்திகொள்ள நேரிடலாம்.

உதாரணத்துக்கு, சிரியாவில் இருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் மக்கள் பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துகொண்டிருப்பது, அந்த நாடுகளில் பலத்த விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்துவருகிறது. பிரிட்டனில் ஒலித்த அதே குரல் அங்கும் ஒலிக்கிறது. `நாமே தடுமாறிக்கொண்டி ருக்கும்போது எதற்காக சிரியா போன்ற பலவீனமான நாடுகளின் பிரச்னையைத் தேவை இல்லாமல் சுமக்க வேண்டும்?' என்கின்றன பல அரசியல் கட்சிகள்.

பிரிட்டன் செய்ததுதான் சரி என்று அதே வழியில் செல்ல அவர்களும் துடிப்பார்கள். இப்படி பல ஐரோப்பிய நாடுகளில் அதிருப்திகளும் விவாதங்களும் எதிர்ப்புகளும் தோன்றும்போது, ஐரோப்பிய யூனியன் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க ஆரம்பிப் பார்கள். இது ஐரோப்பிய யூனியனைப் பாதிக்கவே செய்யும்.

No comments:

Post a Comment