July 7, 2016

மகிந்தவை மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் வைப்பதே எமது இலக்கு!

ஜனாதிபதி ஆசனத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அமர வைப்பதே எமது ஒரே இலக்கு என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.


அத்துடன், கூட்டு எதிர்க்கட்சியின் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், அப்பயணம் பசில் ராஜபக்சவையும் கொண்டே முன்னகர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் மிகவும் பழமையானவர்களில் நானும் ஒருவர்.

எனவே, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் கட்சியின் அடுத்த தலைவராக தானே செயற்படவுள்ளேன்.

எனினும், ஒருபோதும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு போட்டியிட போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சுதந்திரக்கட்சி என்ற ஒன்று தற்போது இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் தற்போது 51 உறுப்பினர்கள் செயற்படுகின்றனர். அவர்களில் 7 பேர் விரைவில் அராசாங்கத்துடன் இணைந்து கொள்ள போவதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

முடிந்தால் கூட்டு எதிர்க்கட்சியினை பிரித்து காட்டுமாறு சவால் விட்டோம். எனினும் அரசாங்கத்தினால் ஒருவரை கூட பிரிக்க முடியவில்லை.

இதன் காரணமாகவே தற்போது பசில் ராஜபக்ச கட்சியை இரண்டாக பிரிக்க முயல்வதாக தெரிவித்து பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவே, பசிலையும் இணைத்துக் கொண்டு செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை மீளவும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைப்பதே எமது ஒரே இலக்கு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment