July 26, 2016

தமிழக மீனவர்களுக்கு "செக்" வைத்த இலங்கை!

தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்காணிப்பு கெமரா மூலம் கண்டுபிடிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழக மீனவர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.


தமிழக மீனவர்களின் அத்துமீறல் காரணமாக தமது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக தெரிவித்து, வட மாகாண மீனவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதனை இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், இலங்கை கடல் எல்லையில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதற்கு நெடுந்தீவு பகுதியில் 3 கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதில், சுழலும் கெமரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெமராவில் பதிவாகும் காட்சிகளை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மத்தியில் திரைகளில் காண்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படும் பட்சத்தில் கெமரா பதிவுகளை இந்திய அரசாங்கத்திற்கும் வழங்க தயாராக இருப்பதாகவும் இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழக மீனவர்கள் எங்கெல்லாம் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களோ அங்கெல்லாம் கெமராக்களை பொருத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், கச்சத்தீவில் நிர்மானிக்கவுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின், உயரமான கோபுரத்தில் கண்காணிப்பு கெமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழக மீனவர்களின் அத்து மீறல்கள்களை வெகுவாக குறைக்க முடியும் என இலங்கை கடற்படை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment