July 5, 2016

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கும் உலக தமிழர் பேரவை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், கடந்த 29ஆம் திகதியன்று ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைன் முன்வைத்த வாய்மூல அறிக்கையை, லண்டனை தலைமையகமாக கொண்ட உலக தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.


ஆணையாளர் தமது அறிக்கையில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பல யோசனைகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இது ஆணையாளரின் கண்காணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கருத்தாக அமைந்துள்ளது என்று உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அரசியல் அமைப்பு யோசனையை பொறுத்த வரை அது சிறந்த முன்னெடுப்பாகும். எனினும் படையினர் வசம் உள்ள காணிகளை பொதுமக்களிடம் திருப்பி வழங்கல், பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் என்பன இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

இந்த விடயங்களில் இலங்கை அரசாங்கம் செயற்படும் போதே சிறுபான்மையினர் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் பேரவை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் சட்டத்தில் நீதிக்கான பொறிமுறைக்கு இடமில்லை என்ற அடிப்படையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச பங்களிப்பு தேவை என்ற ஆணையாளரின் கருத்து வரவேற்கத்தக்கது என்றும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

ஆணையாளரின் இந்தக்கருத்துக்களை சர்வதேசமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தநிலையில் சர்வதேசம் தொடர்ந்தும் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துக்கு உதவியளிக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment