July 1, 2016

மன்னாரில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் சித்திரவதை ; வைத்தியசாலையில் அனுமதி!

மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தில் புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் 38 வயதுடைய அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


இவர் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் மன்னார் உயிலங்குளம் அருட்தந்தையின் பாதுகாப்பில் இருந்த நிலையில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி மதுவந்தி நேற்று வியாழக்கிழமை மன்னார் பொலிஸ் நிலையம், மற்றும் மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் 38 வயதுடைய அன்ரன் டெனி நேற்று வியாழக்கிழமை இரவு தப்பிவந்த நிலையில் நொச்சிக்குளம் பிரதேசத்தில் வைத்து பொது மக்கள் மற்றும் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, 2001 ஆம் ஆண்டு யூலை 24 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அன்ரனி டெனி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒரு வருடத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்னர் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அச்சுறுத்தல் விடுத்தாகவும் கூறிய அவரது மனைவி, கடந்த 19ஆம் திகதி மீண்டும் அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் அவரை சரணடையுமாறு உத்தரவிட்டுச் சென்றதாகவும் கூறினார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இவ்வாறு தனது கணவருக்கு தொடர்ச்சியாக விடுத்துவந்த அச்சுறுத்தல் காரணமாக முதலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திலும், பின்னர் மன்னார் உயிலங்குளம் பங்குத்தந்தையின் பாதுகாப்பில் இருந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு கடத்தப்பட்டுள்ளதாக மதுவந்தி என்ற அன்ரனின் மனைவி குறிப்பிட்டார்.






No comments:

Post a Comment