July 6, 2016

ஆரோக்கியபுரம் மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும்! ரவிகரன் மா.உ

துணுக்காய் ஆரோக்கியபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப பாலன்குளம் புனரமைக்கப்படுவது முக்கிய தேவையாகிறது என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தின் எல்லைக் கிராமமான ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்துக்குரிய நிலங்கள் இன்னும் சீர்செய்யப்படவில்லை. பாலன்குளத்தை நம்பியே அவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் குளத்தின் புனரமைப்போ, அந்த மக்களின் வாழ்வாதாரக் காணிகளோ இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

கடந்தாண்டு ஆரோக்கியபுரம் மக்களின் குறைகேள் சந்திப்பின்போது அங்குள்ள 120 குடும்பங்களும் தங்களுடைய வாழ்க்கையை இந்தக்குளத்தின் மூலமாகவே கொண்டு செல்ல முடியும் எனவும் இதனை விடுவித்துத்தரும் படியும் கோரிக்கை வைத்தனர்.

அன்றிலிருந்து மாகாண விவசாய அமைச்சிடமும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் தொடர்ச்சியாக இக்குளத்தின் விடுவிப்பு தொடர்பில் குரல் கொடுத்து வருகின்றேன்.

இதன் பலனாக இக்குளம் தொடர்பான முன்னேற்றமான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்டவர்கள் எடுத்து வருகின்றார்கள். இக்குளத்தின் புனரமைப்புக்காக இவ்வாண்டின் ஒதுக்கீடாக 6 மில்லியன் ரூபா முக்கிய வேலைகளை நிறைவேற்றுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்குளத்தை முழுமையான புனரமைப்பு செய்வதற்கு 18 மில்லியன் அண்ணளவாக தேவை என நீர்ப்பாசன பொறியியலாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.

இக்குளமானது துணுக்காய் ஆரோக்கியபுரம் மக்களுடைய வாழ்வாதாரத்திற்குரியதாக இருந்தாலும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அக்கராயன் கமநல சேவைத்திணைக்களத்தின் பராமரிப்பில் இருந்து வருகின்றது. 8 அடி உயரத்திற்கு நீரைக்கொள்ளக் கூடியதும் 150 ஏக்கருக்கு மேலதிகமாக காணிகளுக்கு நீரை வழங்கக்கூடியதுமான இக்குளத்தினூடாக பெரும்போகம், சிறுபோகம் என தொடர்ச்சியாக செய்கை பண்ணக்கூடிய வளம் நிறைந்த

குளமாகும்.

இக்கிராமத்திலுள்ள மக்களின் முக்கிய தேவையாகவுள்ள இக்குளத்தை புனரமைப்பு செய்து இந்த மக்களுக்கு கூடிய விரைவில் வழங்க முடியும் என ரவிகரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment