July 13, 2016

புலிகளின் ஆயுதப் பலத்துடனான பாரிய பேரம் பேசும் சக்தி – அமைச்சர் மனோ!

நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய சுகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக இருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இதனால் தாம் ஏற்படுத்தியதாகக் கூறிக்கொள்ளும் மைத்ரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டியது இன்றியமையாதது என்றும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள மனோ கணேசன், நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுத்துவிடும் என கனவு கண்டுகொண்டிருக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.,

புதிய தேர்தல் முறை மாற்றத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தாக்கங்கள் ஏற்படாவிட்டாலும், வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படவுள்ளன.

இதன் மூலம் படிப்படியாக தமிழ் மக்களின் உரிமைகள் திட்டமிட்ட முறையில் பறிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோ கணேசன், தமிழ் மக்கள் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் விழிப்புடன் செயற்படுவது அவசியம் என தெரிவித்தார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மைதிரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தமையினால் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் தேசிய சுகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழர்களிடத்தில் ஆயுத பலத்துடன் காணப்பட்ட பேரம்பேசும் சக்தியை உரிய முறையில் பயன்படுத்த தவறியுள்ளதாக தேசிய சுகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் பலத்துடனான பாரிய பேரம் பேசும் சக்தியை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் தமிழர்கள் தற்போது பல விடயங்களில் முன்னேறியிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொழி உரிமைக்கு அப்பால் சென்று தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய மனோ கணேசன், மொழிப்பிரச்சினையில் ஆரம்பித்த தேசிய இனப்பிரச்சினை அதற்கு அப்பால் சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதனால் அதிகாரப் பகிர்வு இன்றி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.

No comments:

Post a Comment