July 13, 2016

இலங்கையை நோக்கி படையெடுக்கும் இராஜதந்திரிகள்..!! அழுத்தத்தின் ஆரம்பம்….?

சர்வதேச நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகள் அண்மைய நாட்களாக அடுத்தடுத்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், யுத்த குற்ற விசாரணை பொறிமுறை குறித்து அரசாங்கம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாகவும் அதே சந்தர்ப்பத்தில் மேற்குலகத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மூன்று நாள் விஜயமாக இலங்கை வந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ நேற்று முன்தினம் நாடுதிரும்பியுள்ள நிலையில், இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் இலங்கை வரவுள்ளார்.

கடந்த வருடம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அமெரிக்கா முக்கிய பங்குதாரராக செயற்பட்டது. அண்மையில் ஜனாதிபதி மைத்திரி, தான் ஆட்சியில் இருக்கும்வரை சர்வதேசத்தின் தலையீட்டை அனுமதியேன் என்று அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை வருவதானது, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்படுத்தப்படும் விசாரணை பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் இருக்கவேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்ற நிலையில், நாளைய தினம் கூட்டமைப்பினருடன் நிஷா பிஷ்வால் சந்திப்பில் ஈடுபடவுள்ளார். இதன்போது அமெரிக்காவின் அனுசரணையுடன் கடந்த வருடம் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கூட்டமைப்பு வலியுறுத்துமென, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளக விசாரணை பொறிமுறையில் காணப்படும் சிக்கல்கள், அதனை நடைமுறைப்படுத்தும் போது எதிர்கொள்ளும் சவால்கள் என்பன குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது நிஷா பிஷ்வால் கலந்துரையாடவுள்ளார்.

அத்தோடு, அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரத்திற்கு பொறுப்பான உதவிச்செயலாளர் டொம் மலினோக்ஸியும் இன்று இலங்கை வரவுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் யுத்தத்திற்கு பின்னராக காலப்பகுதியிலும் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், இவரது விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலினோக்ஸியின் விஜயத்தை தொடர்ந்து, ரஷ்ய வெளிவிகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ, அதற்கடுத்ததாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் என இலங்கைக்கு படையெடுக்கும் சர்வதேச உயர்மட்ட இராஜதந்திரிகளின் பட்டியல் நீண்டு செல்கிறது.

சாதாரணமாக வருடமொன்றிற்கு இரண்டு அல்லது மூன்று வெளிநாட்டு உயர்மட்ட இராஜதந்திரிகளே இலங்கைக்கு வரும் நிலையில், தற்போதைய அதிகரித்த விஜயம், பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்வதேச நிகழ்ச்சிநிரலின் மையமாக இலங்கை திகழ்கின்ற நிலையில், அதனை சரியான முறையில் இலங்கை அரசாங்கம் கையாள தவறுமாக இருந்தால், பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment