February 22, 2015

களம் புகுகின்றது யாழ்.பல்கலைக்கழக சமூகம்! அனைத்து தரப்புக்களிற்கும் அழைப்பு!

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டுமொரு பொங்குதமிழிற்கான முன்னோடி நிகழ்வாக யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும்
போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

இறுதிப் போரிலே எம் இனத்தின் மீது இலங்கை அரசாங்கம், அதன் இராணுவ இயந்திரத்தைக் கொண்டு ஈவிரக்கமின்றி நிகழ்த்திய மனிதப் பேரவலங்களுக்கு, ஆறு வருடங்களை எட்டிய நிலையிலும் நீதி கிடைக்கவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கை ஊட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் இது தொடர்பான பிரேரணைகள் சர்வதேச நாடுகளின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டு வந்தன. ஆனால் அதற்கெல்லாம் கடுகளவும் அசையா நிலையிலேயே மஹிந்த தலைமையிலான இலங்கை அரசாங்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இவ்வருட மார்ச் மாதமளவில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை திட்டமிடப்பட்டபடி சமர்ப்பிக்கப்பட இருந்தது. எனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் ஆனது ஈழத்தமிழர்களாகிய எமக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவது போன்ற மிகப் பெரிய வேதனையுடனான ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடக்கு-கிழக்கு இராணுவ கட்டமைப்பில் எதுவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. இராணுவத்தினரின் தலையீடுகள் தமிழர் பிரதேசம் எங்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அச்சுறுத்தல், பின்தொடர்வது, கண்காணிப்புக்கள் என இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் இச்சூழ்நிலையை சர்வதேசம் பராமுகப்படுத்துவதாகவே இவ் விசாரணை அறிக்கை பின்போடப்பட்டமையை நாம் நோக்குகிறோம்.

இந்நிலையில் தற்போதைய புதிய அரசாங்கத்தினால் கூறப்படுகின்ற உள்ளக விசாரணையானது குற்றவாளிகளை காப்பாற்ற முற்படுவதோடு, ஈழத் தமிழர்களாகிய எமக்கு அடிப்படை மனித உரிமை பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முன்னேற்பாடுகளே அன்றி வேறல்ல. இலங்கையின் புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினது உள்ளக விசாரணையில் எமக்கு துளியளவேனும் நம்பிக்கை இல்லை.

இதனைக் கருத்தில் கொண்டு எமது வாழ்நிலைப் பிரச்சினைக்குரிய நீதி கிடைக்க இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசம் போதிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இதன் மூலமாக தமிழருக்குரிய நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழி கிடைக்கும் என நாம் நம்புகிறோம். மேலும் ஈழத்தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலிடம் வலியுறுத்துகின்றோம்.

எனவே தமிழ் மக்களின் உரிமைக் குரலாக விளங்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் எமது நீதிக்கான ஒருமித்த குரலை சர்வதேசத்திற்கு அமைதி வழியில் முரசறைய அன்றைய தினம் பல்கலை முன்றலில் ஆரம்பமாகும் பேராட்டத்தில் அனைவரும் அணிதிரளுமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்றுள்ளது.

No comments:

Post a Comment