July 26, 2016

பாதயாத்திரை பற்றி வாய்திறக்காத மைத்திரி – மகிந்த அணியினர் ஏமாற்றம்!

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எந்தக் கருத்தையும் வெளியிடாதது, மகிந்த ஆதரவு அணியினரை ஏமாற்றமடையச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாளை மறுநாள் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி 5 நாள் பாதயாத்திரையை மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ளனர்.

இந்த நிலையில், கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, பாதயாத்திரையைக் குழப்புவதற்காகவே சிறிலங்கா அதிபர் இந்தக் கூட்டத்தை ஒழங்கு செய்துள்ளதாக கருதி நேற்று நண்பகல் கூட்டு எதிரணியின் அவசர கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு ஆராயப்பட்டது.

இதன் போது பாத யாத்திரை தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வாறு பேச வேண்டும் என்றும் தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், நேற்று மாலை அதிபர் செயலகத்தில், கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின், உறுப்பினர்களை மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன் போது, மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை மறுநாள் நடத்தப்படவுள்ள பாத யாத்திரை தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிடாதது மகிந்த தரப்பினரை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

பாத யாத்திரைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எதையும் மேற்கொண்டால், அதனைக் கொண்டு கூட்டு எதிரணியின் அரசியல் நடவடிக்கைகளை விரிவாக்கத் திட்டமிட்டிருந்த மகிந்த தரப்பினருக்கு, சிறிலங்கா அதிபரின் நகர்வு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment