July 5, 2016

செத்த பாம்பான இனவாத சக்திகளுக்கு உருவேற்றும் முயற்சிகள் ஏன்?

உயிர்மூச்சும் நின்று போன ஒரு இயக்கத்தைப் பற்றி இன்னும்தான் பெரிதாகப் பொருட்படுத்திக் கொண்டிருப்பதில் எதுவித அர்த்தமும் இல்லை. அவ்வாறு பெரிதுபடுத்த முற்படும் போது மக்கள் மத்தியில் ஐயங்கள் ஏற்படுவதற்கும் இடமுண்டு.


செத்துப் போன பாம்பை அடிப்பது போல’ என்றொரு உவமைத் தொடர் தமிழில் உண்டு. வீராவேசமும் செயற்பாடுகளும் முற்றாக ஸ்தம்பித்துப் போன ஒரு தனிநபரையோ அல்லது அமைப்பையோ பெரிதென நினைத்துப் பொருட்படுத்துவதற்கு உவமையாக தமிழில் அந்த உவமைத் தொடர் கூறப்படுவதுண்டு.

பொதுபல சேனா போன்ற மதவாத அமைப்புகளுக்கு எமது சிறுபான்மை அரசியல் தரப்புகள் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் பார்க்கின்ற போது ‘செத்த பாம்பை அடிப்பது போல்’ என்ற உவமைத் தொடர்தான் பொருத்தமானதாகப் படுகிறது.

பொதுபல சேனா மாத்திரமன்றி தென்னிலங்கையில் செயற்பட்டு வந்த பௌத்த மதவாத அமைப்புகள் அனைத்துமே இப்போது உயிர் மூச்சையும் இழந்து அடங்கிப் போய்க் கிடக்கின்றன.

கடந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது பௌத்த மதவாத அமைப்புகள் அனைத்துமே மஹிந்த ராஜபக்சவுக்குப் பின்புலமாக நின்று ஆதரவளித்தன.

இனவாதத்தையும் மதவாதத்தையும் ஊட்டுவதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவை மஹிந்த ராஜபக்சவுக்குத் திரட்டிக் கொடுப்பதில் பௌத்த மதவாத அமைப்புகள் தீவிரமாகச் செயற்பட்டன.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் பௌத்த மதவாத அமைப்புகள் இதேவிதமான பாணியிலேயே இயங்கின.

எனினும் அவ்வமைப்புகளின் பக்கபலத்தினால் மஹிந்த ராஜபக்சவுக்கு எதுவித பலனும் ஏற்படவில்லை.

இரு தேர்தல்களின் போதும் சிங்கள மக்களின் ஆதரவை பௌத்த மதவாத சக்திகளால் திரட்ட முடியாமலே போனது.

அது மாத்திரமன்றி கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பொதுபல சேனாவினால் ஒரு ஆசனத்தையேனும் வென்றெடுக்க முடியாமல் போனது.

நாடெங்கும் பொதுபல சேனாவுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவானதென்பது ஒருபுறமிருக்க, அந்த அமைப்பின் தலைவரான ஞானசார தேரருக்குக் கிடைத்த வாக்குகளும் மிகச் சொற்பமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுபல சேனாவும் அதன் தலைவரான ஞானசார தேரரும் நாட்டில் பெரும் பிரதிமை ஒன்றைக் கட்டியெழுப்பி வைத்திருந்த போதிலும், தேர்தலின் போது தலை குப்புற வீழ்ந்தமைக்கான காரணங்களை ஆராய்ந்த போதுதான் உண்மையான யதார்த்தங்கள் வெளிப்படத் தொடங்கின.



பௌத்த மதவாத அமைப்புகள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருப்பதாகத் தென்பட்ட காட்சிகள் யாவும் வெறும் பிரமைதான்.

மதவாத அமைப்புகளின் பிரசாரமும் செயற்பாடுகளும் சிங்கள மக்களை வெறுமனே பரவசப்படுத்தியதே தவிர அம்மக்களின் உள்ளங்களை கொஞ்சமேனும் வசீகரிக்கவில்லை என்பதே உண்மை.

பொதுபல சேனா போன்ற அமைப்புகளை சிங்கள மக்கள் வெறும் காட்சிப் பொருளாக மாத்திரமே நோக்கினார்கள்.

பௌத்த மதவாத அமைப்புகளை பெரிதாகப் பொருட்படுத்திக் கொண்டது சிறுபான்மை அரசியல் தரப்புகள் மட்டுமே.

அவை தொடர்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதியை விதைத்ததும் சிறுபான்மை அரசியல் தரப்புகள் தான்.

கடந்த வருட பொதுத் தேர்தலில் கிடைத்த பாரிய அடியுடன் பொதுபல சேனாவின் நாடி நரம்புகள் ஓய்ந்து விட்டன எனக் கூறுவதே பொருத்தம்.

வெறுமனே சுவாசத்துடன் மாத்திரம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது அந்த அமைப்பு.

தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் பௌத்த பேரினவாதத்தை மீண்டும் முன்னெடுத்துச் சென்று எழுச்சியை உருவாக்கலாமென்ற நம்பிக்கையெல்லாம் பொதுபல சேனாவிடம் இப்போது கிடையாது.

கடந்த வருடம் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் சிங்கள மக்களின் உள்ளக்கிடக்கை எதுவென்பதை நன்கு பார்த்து விட்டது பொதுபல சேனா.

இனவாதத்தை முன்னெடுத்துச் செல்வது எதிர்காலத்தில் பயனளிக்கப் போவதில்லை என்பது ஞானசார தேரருக்கு நன்கு தெரிந்து போன உண்மை.

பௌத்த மதவாத அமைப்புகளின் நிலைமை இவ்வாறிருந்த போதிலும், சிறுபான்மை அரசியல் தரப்புகள் பொதுபல சேனாவையும் ஞானசார தேரரையும் இன்னும்தான் பெரிதுபடுத்திக் கொண்டிருப்பதன் உள்நோக்கம்தான் இன்னும் புரியாமலிருக்கிறது.

சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து வீழ்ந்து போய்க் கிடக்கும் பொதுபல சேனாவை, பேரினவாதத்தின் பெரு விருட்சமாக சிறுபான்மை மக்கள் மத்தியில் இன்னுமே உருவகித்துக் காட்டும் வகையில் காரியங்கள் நடைபெறுவதை இன்று நாம் காண்கின்றோம்.

பொதுபல சேனாவுக்கு எதிராக பரவலான கண்டனங்கள் இப்போதும் முன்வைக்கப்படுகின்றன.

ஞானசார தேரரின் ஒவ்வொரு அசைவும் பூதாகரமாக்கிக் காண்பிக்கப்படுகின்றன.

பொதுவாகக் கூறுவதானால் பொதுபல சேனாவை புதைகுழியிலிருந்து மீட்டெடுத்து மீண்டும் உருக்கொடுக்கும் காரியங்களே சிறுபான்மை அரசியல் தரப்பில் இன்று இடம்பெறுகின்றன.

இவ்வாறான முயற்சிகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள அவசியமும் அவசரமும் என்ன?

அடங்கிப் போய்க் கிடக்கும் மதவாத சக்திகளுக்கு உயிர் கொடுக்க வேண்டிய தேவைதான் என்ன?

சிறுபான்மை மக்கள் மத்தியில் உள்ள சிந்திக்கக் கூடியோரின் உள்ளத்தில் எழுகின்ற கேள்விகள் இவை.

தென்னிலங்கையில் அரசுக்கு எதிரான அரசியல் சக்திகள் தொடர்ந்தும் உயிர் வாழ்வதற்கு இனவாதம் அவசியமானதென சிறுபான்மை மக்கள் நம்புகின்றனர்.

அதேபோன்று சிறுபான்மை அரசியல் தரப்புகள் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும் இவ்வாறான ஏதோவொரு இனவாத துரும்பொன்று அவசியமாகின்றதா என்ற வினா இயல்பாகவே இங்கு எழுகிறது.

மக்களை எழுச்சியூட்டுவதன் மூலம் ஆதரவைப் பெருக்கும் தந்திரமா இதுவென்ற சந்தேகம் எழுகிறது.

எமது நாட்டின் அரசியல் இரு துருவங்களாகிப் போய்க் கிடக்கின்றது.

எமக்கு எதிர்த்திசையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் துரும்பாகக் கொண்டு பேரினவாத எழுச்சியை உருவாக்குவதில் ஒரு அணி உறுதியாக நிற்கிறது.

அதன் அரசியல் அதர்மம் எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அந்த எழுச்சி நேர்மையுடனும் சாதுரியமாகவும் முறியடிக்கப்பட வேண்டியதாகும்.

ஆனால் அவர்களது பாதையில் நாமும் செல்லத் தலைப்படலாகாது.

அப்பாதை நேர்மையற்றது. விமோசனமும் தராது.

No comments:

Post a Comment