July 2, 2016

இலங்கை குமாரபுரம் படுகொலை தொடர்பாக 14 பேர் சாட்சியம்!

அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் 7 ஜுரிகள் சபை முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை 20 வருடங்களின் பின்னர் இந்த வழக்கு விசாரணை ஆரம்பமானது.


எதிரிகளான 6 இராணுவ வீரர்களில் மூன்று பேரை சாட்சிகள் தனித் தனியாக அடையாளம் காட்டியுள்ளனர்.

20 வருடங்களுக்கு முன்பு யுத்த காலத்தில் 11 .02. 1996 அன்று தி இரவு இடம் பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள் , குழந்தைகள் உட்பட 26 பேர் இராணுவதினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர்.

மது போதையில் கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் அந்த கிராமத்தை சேர்ந்த தமிழர்கள்.

இந்த படுகொலை வழக்கில் தெகியத்த இராணு முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

1996-ஆம் ஆண்டு மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் குறித்த 8 பேரும், சாட்சிகளினால் அடையாளம் காணப்பட்ட நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது.

அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்பு கருதி சட்ட மா அதிபதியின் ஆலோசனையின் பேரில் இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள், சிவில் சமூகத்தினர் உட்பட 121 பேர் சாட்சிகளாக மூதூர் போலீசாரால் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணைக்கு குறித்த சாட்சிகளில் 20 பேர் அழைக்கப்பட்டுள்ள போதிலும் 16 பேர் மட்டுமே சமூகமளித்திருந்தனர். ஏனைய நான்கு பேரும் மரணமடைந்து விட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான வழக்கு விசாரணையில், பெண்கள் உட்பட 12 பேர் சாட்சியமளித்துள்ளனர்

எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள எட்டு இராணுவ வீரர்களில் இருவர் மரணமடைந்துள்ள நிலையில் தற்போது அனுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணை ஏனைய ஆறு பேருக்கு எதிராகவே நடைபெற்று வருகின்றது.

ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த ஆறு இராணுவ வீரர்களும். வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் தொடரும்.

No comments:

Post a Comment