June 19, 2016

காணாமல்போனோர் பணியகம் இவ்வருட இறுதிக்குள் அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

காணாமல் போனோர் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பணியகத்தை இந்த வருட இறுதிக்குள் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்தப் பணியகத்திற்கான உறுப்பினர்களை நியமிக்கும் செயற்பாடு எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும் என்று அரச தரப்பிலிருந்து அறியமுடிகின்றது.

யுத்தகாலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்து விசாரணை நடத்தி அதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பொறிமுறையை அமுல்படுத்தவே இந்த பணியகத்தை அரசாங்கம் அமைக்கவுள்ளது.

மேலும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நீதிமன்றம் அமைப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதோடு அதற்கு உள்நாட்டு நீதிபதிகளே நியமிக்கப்படுவார்கள் என்ற அழுத்தமான செய்தியை இம்முறை ஜெனீவா அமர்வில் தெரிவிப்பதற்கான நடவடிக்கையையும் எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழு அடுத்தமாதம் கலைக்கப்படவுள்ளதோடு ஆணைக்குழுவின் இறுதி இடைக்கால அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment