June 19, 2016

கொள்கைப் பிறழ்வாளர்களும், மாயமான் அரசியலும்-கலாநிதி சேரமான்!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்ந்தேறி ஏழாண்டுகள் உருண்டோடி விட்டன. 2009 மே 18 அன்று தமிழீழ மண்ணை முழுமையாக ஆக்கிரமித்துத் தமிழீழ நடைமுறை அரசை சிங்களம் வேரோடு பிடுங்கி எறிந்த பொழுது
ஒவ்வொரு தமிழர்களிடமும் ஓர் கேள்வி இருந்தது. ஆயுத எதிர்ப்பியக்கமாக முப்பத்தேழு ஆண்டுகள் முன்னகர்ந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் செல்நெறி இனி எத்திசையில் நகரப் போகின்றது? என்பதுதான் அது. இன்று ஏழாண்டுகள் கடந்துள்ள நிலையில் இதற்கான பதில் இன்னமும் எவரிடமும் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
ஆனாலும் 2009 மே 18 உடன் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முற்றுப்பெறவில்லை. ஏழாண்டுகள் கடந்தும் அதன் அசைவியக்கம் புலம்பெயர் தேசங்களில் தக்க வைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஏழாண்டுகளில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முன்னகராத பொழுதும் தமிழீழக் கருத்தியல் உயிர்ப்புடனேயே உள்ளது.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அசைவியக்கத்தை எவ்வாறாவது முடக்கி விட வேண்டும், தமிழீழக் கருத்தியலுக்கு சாவு மணி அடித்துவிட வேண்டும் என்று சிங்களமும், அதற்கு முண்டுகொடுத்து நின்ற இந்திய ஏகாதிபத்தியமும் அன்று பகீரத பிரயத்தனங்களில் ஈடுபட்டன.
இதற்கெனத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை விலைபேசி விற்கத் துணிந்த முன்னாள் போராளிகள் சிலரை சிங்களம் தெரிவு செய்தது. இவர்களில் ராம், நகுலன் போன்றவர்கள் தாயகத்தில் இருந்தவாறு புலிப்பூச்சாண்டி காட்டிப் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்க, ஏதோ எதிரியின் பிடியில் இருந்து தப்பி வந்தவர்கள் போன்று பாசாங்கு செய்து புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களுக்குள் ஊடுருவும் முயற்சிகளில் தயாமோகன் போன்ற இன்னொரு தொகுதியினர் களமிறங்கினார்கள். இந்த இரு தரப்பினருமே ஒரேயொரு மூலோபாயத்துடனேயே தமது காய்களை நகர்த்தினார்கள்.
கே.பியையும், அவரது பட்டத்து இளவரசரான விசுவநாதன் உருத்திரகுமாரனையும் மையப்படுத்திய புலம்பெயர் தமிழ்த் தலைமையொன்றை உருவாக்குவதுதான் அந்த மூலோபாயமாக இருந்தது.
ஆனாலும் இறுக்கமான முறையில் இயங்கிய புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை உடைத்துத் தாம் விரும்பியவாறான தலைமைத்துவத்தை உருவாக்குவதென்பது இவர்களைப் பொறுத்தவரை அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. விளைவு: 2003ஆம், 2004ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையால் பணிநீக்கம் செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ்த் தேசிய அதிருப்தியாளர்களை மையப்படுத்திய சமாந்தர வலையமைப்பு ஒன்று கட்டியெழுப்பப்பட்டது.
எமது முன்னைய பத்திகளில் நாம் பல தடவைகள் சுட்டிக் காட்டியது போன்று 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமது அனைத்துலக வலையமைப்பில் மறுசீரமைப்புக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்வதற்கு முன்னர் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியச் செயற்பாடு என்பது கே.பியின் காட்டாட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. இன்றும் தனது இரு கரங்களாக விளங்கும் தர்மலிங்கம் சர்வேந்திரா (சர்வே), வேலும்மயிலும் மனோகரன் (மனோ) ஆகியோரையும், அவர்களின் கையாட்களையும் மையப்புள்ளிகளாகக் கொண்ட அனைத்துலக வலையமைப்பையே அக்காலத்தில் கே.பி இயக்கி வந்தார்.
இவர்களோடு முரண்டுபட்டு நின்ற செயற்பாட்டாளர்கள் பெயரளவில் மட்டுமே பொறுப்பாளர்களாக விளங்கினார்களே தவிர, நடைமுறையில் அதிகாரம் என்பது கே.பியின் கையாட்களாலேயே பிரயோகிக்கப்பட்டது.
இதன் விளைவாக அதிகாரத் துர்ப்பிரயோகங்கள் மட்டுமன்றி, நிதி முறைகேடுகளும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமூக விடுதலைக் கொள்கைக்கு முரணான நடைமுறைகளும் தாராளமாக அரங்கேறின.
2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமது அனைத்துலகக் கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பொழுதும்கூட, உடனடியாக கே.பியின் கையாட்கள் அனைவரையும் அவர்களால் அகற்ற முடியவில்லை. இதற்கான உதாரணமாக அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபற்றற்ற ஊடகமாக விளங்கிய ஐ.பி.சி வானொலியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடலாம்.
1998ஆம் ஆண்டின் இறுதியில் ஐ.பி.சி வானொலியைத் தமது ஊடகக் கட்டமைப்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்வாங்கிக் கொண்ட பொழுது, அதற்கான நிர்வாகப் பொறுப்பில் தனது வலது கையான சர்வேயின் நண்பர் ஒருவரையே கே.பி அவர்கள் நியமித்தார். இதன் பின்னர் நடைபெற்ற நிதி மோசடிகள் பற்றி நாம் இங்கு விலாவாரியாக எழுதுவது அனாவசியமானது. ஏனென்றால் இவை பற்றி ஐ.பி.சி தமிழ் வானொலியின் ஒலிபரப்பாளர்கள் பலர் போர் ஓய்வுக் காலப் பகுதியில் பக்கம் பக்கமாக வன்னிக்கு எழுதி அனுப்பியிருக்கின்றார்கள்.
ஆனால் அதைவிட இன்னொரு கொடுமை அன்று ஐ.பி.சி வானொலியில் நடந்தேறியது. அங்கு பணிபுரிந்த ஒலிப்பாளர்கள் பலருக்கு உரிய முறையில் கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுதான் அது. பல ஒலிபரப்பாளர்கள் முழுநேரமாகக் கொடுப்பனவு எதுவும் இன்றி ஆறு மாதங்கள் பணிபுரிந்த கொடுமைகளும் நடந்தேறின. வானொலியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த சர்வே அவர்களின் நண்பர் ஒய்யாரமாக வானொலியின் பணத்தில் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க, முழுநேர ஒலிபரப்பாளர்கள் கொடுப்பனவு வேண்டி நாள்தோறும் அவரது அலுவலம் முன்பாகத் தவம் கிடக்க நேர்ந்தது.
இதன் விளைவாக 2003ஆம் ஆண்டின் இறுதியில் ஐ.பி.சி வானொலியின் பெரும்பாலான ஒலிபரப்பாளர்களால் பணிமறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு தேசிய விடுதலை இயக்கத்தின் வானொலியின் பணியாளர்கள், ஆறு மாதங்களாக கொடுப்பனவு மறுக்கப்பட்ட நிலையில் பணிமறுப்பில் குதிக்கும் நிலை ஏற்பட்டது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஆனால் ஐ.பி.சி வானொலியை நிர்வகித்த சர்வேயின் நண்பரோ இதனையிட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எதுவுமே நடைபெறாதது போன்று அவர் நடந்து கொண்டார். இதன் பின்னர் விடயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தின் காதுக்குச் செல்ல, கொடுப்பனவு மறுக்கப்பட்ட பணியாளர்களுக்கென்று பிரத்தியேகமாக பணத்தை ஒதுக்கீடு செய்து, அதனை வழங்குவதற்கென்று பிரத்தியேகமாக ஒருவரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை நியமித்தது.
இங்கு இவ்விடயத்தை நாம் குறிப்பிடுவதன் நோக்கம், தமது பணியாளர்களின் நலனில் எவ்வளவு அக்கறையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை நடந்து கொண்டது என்பதையும், அதற்கு முரணாக எவ்வாறான கொள்கைப் பிறழ்வுடன் கே.பியின் கையாட்கள் புலம்பெயர் தேசங்களில் இயங்கினார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுவதற்குத் தான்.
இவ்வாறான கொள்கைப் பிறழ்வாளர்கள் பின்னர் படிப்படியாகப் புலம்பெயர் கட்டமைப்புக்களில் இருந்து அகற்றப்பட்டமை வேறு கதை.
இப்படிப்பட்ட கொள்கைப் பிறழ்வாளர்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட வலையமைப்புத்தான் 2009 மே 18 இற்குப் பின்னர் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை உடைப்பதற்கு சிங்களமும், அதற்கு முண்டுகொடுத்து நின்ற இந்திய ஏகாதிபத்தியமும் களமிறக்கிய முன்னாள் போராளிகளுக்குப் பக்கபலமாக உருப்பெற்றது.
அதிகாரத் துர்ப்பிரயோகங்கள், நிதி மோசடிகள், கொள்கைப் பிறழ்வுகள் போன்றவற்றிற்காகத் தம்மைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பணிநீக்கம் செய்ததையிட்டுக் கடும் சீற்றம் கொண்டிருந்த இவர்கள், 2009 மே 18 இற்குப் பின்னர் ஏற்பட்ட சூழலைத் தாம் பழிதீர்ப்பதற்குக் கிடைத்த காலகட்டமாக எண்ணிச் செயற்பட்டார்கள்.
சாத்தான் வேதம் ஓதும் கதையாகத் தமிழ் மக்கள் தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்ற பெயரில் விசக் கருத்துக்களை விதைத்தார்கள். இதற்கெனப் பல்வேறு பெயர்களில் இவர்களால் இணையத்தளங்கள் தொடங்கப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மீது சேறுபூசும் கட்டுரைகள் பல்வேறு புனை பெயர்களில் இவர்களால் எழுதப்பட்டன. அத்தோடு இவர்கள் நிற்கவில்லை.
தாயகத்தில் உள்ள போராளிகளுக்கு உதவி புரிய வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடித்தார்கள். இதுவிடயத்தில் ஏலவே புலம்பெயர் தேசங்களில் இயங்கிய தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் செம்மையான முறையில் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்று வீண்பழி சுமத்தினார்கள்.
புலம்பெயர் தேசங்களில் அரசியல் பரப்புரைகளில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்களும் இவர்களால் திட்டமிட்டுக் குறிவைக்கப்பட்டார்கள். உருத்திரகுமாரனைத் தலைவராகக் கொண்டு நாடுகடந்த அரசாங்கம் என்ற மாரீச மாயமானை உருவாக்கிக் கானல்நீரில் காகிதக் கப்பலோட்டினார்கள்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்ந்தேறி ஏழாண்டுகள் கடந்துள்ள நிலையில் அன்று தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை நோக்கி இந்தக் கொள்கைப் பிறழ்வாளர்கள் வீசிய கற்களை இவர்களை நோக்கித் திருப்பியெறிய வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கிறோம்.
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது அன்று பழிசுமத்திய இவர்கள், ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தாயகத்தில் உள்ள போராளிகளின் நலன்களை மேம்படுத்துவதற்கு செய்த பணிகள் தான் என்ன? நாடுகடந்த அரசாங்கம் என்ற மாரீச மாயமானை உருவாக்கி ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவர்கள் சாதித்ததுதான் என்ன?
இதற்கான பதில் ஒன்றுதான்: தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அசைவியக்கத்தின் கூர்முனையை மழுங்கடிக்க முற்பட்டதைத் தவிர வேறு எதையுமே இவர்கள் செய்யவில்லை என்பதுதான் அதற்கான பதில்.
இவர்களில் நாசகார நோக்கத்தை நாம் புரிந்து கொள்வதற்கு ஏழு ஆண்டுகள் பின்நோக்கிச் செல்லத் தேவையில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்தப் போவதாகக் கடந்த ஆண்டின் இறுதியில் அறிவித்தார்கள். இன்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இவர்கள் சாதித்ததுதான் என்ன? எதுவுமே இல்லை என்பதுதான் பதில்.
– ஈழமுரசு--

No comments:

Post a Comment