மனித உரிமைகள் ஆணையாளரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சித்திரவதைகளுக்கெதிரான தினத்தினை முன்னிட்டு இன்று (30) மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலிருந்து கல்லடி பாலம் வரையில் எதிர்ப்புப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
இந்தப் பேரணியை மட்டக்களப்பிலுள்ள மனித உரிமை அமைப்புக்கள், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதில், அரசசார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
“சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்தப் பேரணியில், “சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி, இல்லத்து வன்முறையை இல்லாதொழிப்போம், சித்திரவதை செய்தல் பெருங்குற்றம், சித்திரவதையை இப்போதே நிறுத்துவோம், சிறுவர்கள் எதிர் கொள்ளும் வன்முறையை இல்லாது ஒழிப்போம், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் மற்றும் வன்முறைகளின்றி மனித உரிமையைப் பாதுகாப்போம்” உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கலந்து கொண்டு அமைதியாக பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
No comments:
Post a Comment