June 19, 2016

இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளியாகுமா?

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சி அலைவரிசையில் செய்தித் தொகுப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும்
பணியாற்றிய ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் இறுதிக்கட்ட போரின் போது பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பெருமளவு நம்பப்படுகின்ற நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு திரையுலகினர் முயற்சிகளில் ஈடுபட்டள்ளனர்.

இந்த நிலையில், போர்க்களத்தில் ஒரு பூ என்ற சினிமாவை கே.கணேசன் இயக்கத்தில் ஏ.சி.குருநாத் செல்லசாமி தயாரித்துள்ளார். ஆனால் இந்தத் திரைப்படத்தினை திரையிடும் அனுமதிக்கான சான்றிதழை பெறுவதற்காக தணிக்கை வாரியத்திடம் படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது.

ஆனபோதும், தணிக்கை வாரியம் அதற்கு சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்ட போதிலும், மேன்முறையீட்டினை தீர்ப்பாயமும் நிராகரித்துவிட்டது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் வழக்கு தாக்கல் செய்தனர். இதில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தில் தலையிடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இசைப்பிரியாவின் தாயார் வகிசன் தர்மினி, சகோதரி டி.வேதரஞ்சனி ஆகியோர் வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், ‘இந்தப் படத்தை திரையிட்டால் இசைப்பிரியாவின் சோகமான நினைவலைகள் எங்களை தாக்கிக் கொண்டே இருக்கும். அவரது வாழ்க்கையை சினிமாவில் வேறுவிதமாக சித்தரிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறோம். இலங்கை போரினால் பாதிக்கப்பட்டுள்ள பலர் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து மரியாதையுடனும் வாழ உரிமை உள்ள நிலையில், போர்க்களத்தில் பூ சினிமா வெளியானால் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியாவில் உள்ள சட்டத்தின்படி, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் அடையாளம் எந்த வகையிலும் வெளியிடப்படக்கூடாது. எனவே அவரது வாழ்க்கையை சினிமா, நாடகம், எழுத்து வடிவம் உட்பட எந்த விதத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும். என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ‘இந்த விடயத்தை சமரசம் மூலம் தீர்க்கலாம் என்று கருதுகிறேன். படத்தை வெளியிடுவது தொடர்பாக குருநாத் செல்லசாமி, கணேசன் ஆகியோர், வகிசன் தர்மினி, டி.வேதரஞ்சனி ஆகியோரிடம், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில், 20ஆம் திகதி திங்கட்கிழமை (அதாவது நாளை) மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் பேசி சுமுக தீர்வு காண வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த உரையாடலில் மூலமாக எடுக்கப்படும் முடிவுகளை அறிக்கையாக 23ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment