May 19, 2016

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல்!

தமிழின படுகொலையின் ஏழாவது ஆண்டு நினைவேந்தல்  முள்ளிவாய்க்காலில் மிக உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

காலை 9.00 மணியளவில் வடக்கு மாகாணசபை ஏற்பாட்டிலும் மதியம் 12 மணியளவில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் தமிழின படுகொலையின் நினைவேந்தல் மிக உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் கொல்லப்பட்ட போராளிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் மரணித்த இடங்களை அடையாளம் கண்டு இளைஞர்களும் யுவதிகளும் பிரிந்து பிரிந்து சென்று தீபமேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாமகவே முன்வந்து படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதோடு எத்தடை வந்தாலும் தடைகள் தாண்டி போராடுவோம் என்பதை நிரூபித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்ற போது பாதுகாப்புக்காக தோண்டப்பட்ட பதுங்கு குழிகளிலே பொதுமக்கள் புதைக்கப்பட்டனர். பசித்த வயிற்றுடன் சிறுவர்கள் மிக மோசமாக கொல்லப்பட்டனர்.
முதியவர்கள் முன்நிலையில் இளைஞர் யுவதிகள் கோரமாக படுகொலை செய்யப்பட்டதை பார்த்து அழுத கண் காயும் முன் அவர்களும் இறந்துள்ளனர்.
பச்சைப்பாலகர்கள் பிய்த்தெறியப்பட்டனர். அங்கவீனமாக்கப்பட்டவர்கள் அநாதையான குழந்தைகள் போல் தவழ்ந்து தவழ்ந்து இறந்துள்ளனர்.
கொடூரமன நினைவுகள் தமிழ் மக்களை மட்டுமின்றி சிங்கள மக்களையும் வருத்தியுள்ளது. உலகத்தில் உள்ள அனைவரையும் வருத்தியுள்ளது.
இந்நிலையில் முள்ளிவாய்க்காலில் ஏழு வருடத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இயற்றி இசையமைக்கப்பட்ட சோக விடுதலை கீதங்கள்; இசைக்க விட்டு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
விடுதலைப் போராட்டமானது நீதியான போராட்டம். அதை நிரூபிப்பதற்காகவே ஆத்மாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனிதனையும் இயக்கிக் கொண்டுள்ளது என்பது உண்மை.

No comments:

Post a Comment