May 22, 2016

நான் கூட்டு எதிர்க்கட்சியினரின் தாளத்திற்கு ஆட தயாரில்லை! - ஆர்.சம்பந்தன்!

கூட்டு எதிர்க்கட்சியினரின் தாளத்துக்கு ஏற்ப ஆட தான் தயாரில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் வெளியாகும் சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் நீண்டகாலமாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து நாடாளுமன்றத்தில் பணியாற்றியவன். எனக்கு அரசாங்கத் தரப்பில் இணைந்து செயலாற்றிய அனுபவம் கிடையாது. அந்த வகையில் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நான்தான் என கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதனால் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கத் தேவையில்லை. அரசாங்கத்தின் நல்ல செயற்திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். அதேநேரம் பொதுமக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் வேண்டும் என சம்பந்தன் தெளிவூட்டியுள்ளார்.
நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சரியாக செயற்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றவர்கள் கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் செயற்படும் ஒரு குழுவாகும். அவர்கள் அரசாங்கத்தோடு ஒன்றாக இருந்து விட்டு தற்போது விலகிச் சென்றிருப்பவர்கள். அவர்களின் தாளத்துக்கு ஏற்ப ஆட நான் தயாராக இல்லை.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து சிறிது காலமே ஆகியுள்ளது. எனவே நாங்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். அரசாங்கத்துக்கு சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment