May 22, 2016

பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களுக்கு மக்களின் கட்டளைக்கேற்ப செல்லமாட்டேன் - நடராசா!

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களாக பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியை வளர்ப்பதற்காகவா இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளர்.

மட்டக்களப்பு கோட்டைக் கல்லாற்றில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (21) நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்களுக்குத் தலைமை தாங்க வந்தால், அவ்வாறான கூட்டங்களுக்கு என்னைச் செல்ல வேண்டாம் என என்னைத் தெரிவு செய்த மக்கள் கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
ஆகவே எமது மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்களேயானால், அந்தக் கூட்டங்களுக்கு நான் செல்லமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகளைக் கருத்தில் கொள்ளாமல் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கியுள்ளமை ஏன் என ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். எனவே மக்கள் பிரதிநிதியாகிய உங்களுக்கு அந்தக் கூட்டத்தில் அங்கீகாரம் இல்லாவிட்டால் அவ்வாறான கூட்டத்தில் முன்மொழியப்படுகின்ற அபிவிருத்தி எமக்குத் தேவையில்லை என மக்கள் எனக்குக் கட்ளையிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
எனவே நான் எமது மக்களின் கருத்துக்களுக்கு தலை வணங்குகின்றேன். தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதிக விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே உடனடியாக கிழக்கு மாகாண அமைச்சரவை, மாவட்ட அரச அதிகாரிகள் அனைவரும், ஒன்றிணைந்து செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப துரித கதியில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment